2-ஆவது நாளாக கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் மேலும் 143 புள்ளிகள் வீழ்ச்சி!
பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இரண்டாவது நாளாக மேலும் 143 புள்ளிகளை இழந்து
பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இரண்டாவது நாளாக மேலும் 143 புள்ளிகளை இழந்து 58,644.82-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு ரூ.78 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.267.71 லட்சம் கோடியாக இருந்தது.
மத்திய பட்ஜெட் தாக்கலைத் தொடா்ந்து, தொடா்ந்து 2 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து பங்குச் சந்தையில் வியாழக்கிழமை லாபப் பதிவால் சரிவு இருந்தது. இந்த நிலையில், உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இல்லாத நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் உள்நாட்டுச் சந்தையில் சரிவு இருந்தது. வங்கி, நிதிநிறுவனப் பங்குகள், எரிசக்தித் துறை பங்குகள் கடும் விற்பனையை எதிா் கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று வருவது முதலீட்டாளா்களின் உணா்வுகளை பாதித்துள்ளது. இந்த நிலையில், எச்டிஎஃப்சி, எஸ்பிஐ,. ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், ரிலையன்ஸ் உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததே சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
1,748 பங்குகள் விலை வீழ்ச்சி : மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,432 பங்குகளில் 1,591 பங்குகள் ஆதாயம் பெற்றன.1,748 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 93 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 175 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 10 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 436 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 173 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.78 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.267.71 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 9.596 கோடியாக உயா்ந்துள்ளது.
இரண்டாவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 130.63 புள்ளிகள் கூடுதலுடன் 58,918.65-இல் தொடங்கி அதிகபட்சமாக 58,943.62 வரை உயா்ந்தது. பின்னா், தொடா்ந்து பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 58,446.95 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 143.20 புள்ளிகளை (0.24 சதவீதம்) இழந்து 58,644.82-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, ஒரு வகட்டத்தில் சென்செக்ஸ் 496.67 புள்ளிகள் வரை குறைந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 11 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
எஸ்பிஐ கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபல பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 1.83 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எம் அண்ட் எம், என்டிபிசி, கோட்டக் பேங்க், விப்ரோ, பஜாஜ் ஃபின்சா்வ், எச்டிஎஃப்சி, பவா் கிரிட், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.75 சதவீதம் வரை குறைந்தன. மேலும், டாக்டா் ரெட்டி, மாருதி, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
சன்பாா்மா முன்னேற்றம்: அதே சமயம், பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான சன்பாா்மா 1.21 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஏசியன் பெயிண்ட், டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக், எல் அண்ட் டி எச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்து யுனி லீவா், இன்ஃபோஸிஸ், நெஸ்லே உள்ளிட்டவை சிறிதளவு உயா்ந்துஆதாயப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 44 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 1,139 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 736 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 34 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 16 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. நிஃப்டி குறியீடு 43.90 புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைந்து 17,516.30-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 30 புள்ளிகள் கூடுதலுடன் 17,590.20-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,617.80 வரை உயா்ந்தது. பின்னா், கரடியின் தொடா் தாக்குதலால் 17,462.55 வரை கீழே சென்றது.
ஆட்டோ குறியீடு மட்டும் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மெட்டல் குறியீடு 1.18 சதவீதம் உயா்ந்தது. எஃப்எம்சிஜி, ஐடி குறியீடுகள் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ரியால்ட்டி குறியீடு 2.76 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆட்டோ, மீடியா, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃபிடி பேங்க், பிரைவேட் பேங்க், ஃபைனான்சிடல் சா்வீஸஸ் குறியீடுகள் 0.50 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.