முகப்பு
வணிகம்

உக்ரைன்- ரஷியா பதற்றம் அதிகரிப்பு: தொடர் மந்தநிலையில் பங்குச் சந்தை

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
பகிர்:

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்தது. உக்ரைன் - ரஷியா இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்த நிலையில், சந்தையில் நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 0.66 சதவீதம் சரிவைச் சந்தித்தது.
 உக்ரைன் - ரஷியா இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவது உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக ஏற்கெனவே கச்சா எண்ணெய், தங்கம் விலை அதிகரித்து காணப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக சந்தையில் பங்குகள் விற்பனையும் அதிகரித்துள்ளன. சந்தை பங்கேற்பாளர்களும் காத்திருக்க முடிவு செய்துள்ளதால் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும் சந்தைக்கு பாதகமாக அமைந்துள்ளது. அவர்கள் நிகர அடிப்படையில் திங்களன்று ரூ.2,261.90 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளதாக சந்தைப் பரிமாற்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலையில் பலவீனமாகத் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை, பின்னர் ஓரளவு மீண்டு மேலே சென்றது. ஆனால், நிலைத்து நிற்க முடியாமல் ஐந்தாவது நாளாக சரிவில் முடிந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 2,724 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,441 நிறுவனப் பங்குகளில் 634 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,724 பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தன. 83 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 86 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 176 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.2.62 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.254.78 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 9.78 கோடியாக உயர்ந்துள்ளது.
 5-ஆவது நாளாக சரிவு:
 சென்செக்ஸ் காலையில் 1,244.95 புள்ளிகள் குறைந்து 56,438.64-இல் தொடங்கி, 56,394.85 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 57,505.85 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 382.91 புள்ளிகளை (0.66 சதவீதம்) இழந்து 57,300.68-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 11 பங்குகள் ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 5-ஆவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
 டாடா ஸ்டீல், டிசிஎஸ் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முன்னணி உருக்கு நிறுவனமான டாடா ஸ்டீல் 3.64 சதவீதம், டிசிஎஸ் 3.59 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, எஸ்பிஐ, டாக்டர் ரெட்டீஸ் லேப், ஐடிசி, பார்தி ஏர்டெல், இன்டஸ்இண்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக், ஆக்ஸிஸ் பேங்க், விப்ரோ, ஹெச்யுஎல், எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்டவை 1 முதல் 2.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
 மேலும், எச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 பஜாஜ் ஃபின்சர்வ் முன்னேற்றம்: அதேசமயம், முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின்சர்வ் 1.36 சதவீதம், எம் அண்ட் எம் 1.34 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி, சன்பார்மா, இன்ஃபோசிஸ், மாருதி சுஸýகி, பவர் கிரிட், என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ் நெஸ்லே உள்ளிட்டவையும் சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 114 புள்ளிகள் சரிவு:
 தேசிய பங்குச் சந்தையில் 315 நிறுவனப் பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,606 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் சுமார் 350 புள்ளிகள் குறைந்து 17,847.95-இல் தொடங்கி, 17,843.80 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,148.55 வரை உயர்ந்த நிஃப்டி, இறுதியில், 114.45
 புள்ளிகள் (0.67 சதவீதம்) குறைந்து 17,092.20-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் 17 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 33 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
 மீடியா, ரியால்ட்டி குறியீடு கடும் சரிவு: தேசியப் பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில் மீடியா குறியீடு 3.30 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 2.91 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், பிஎஸ்யு பேங்க், எஃப்எம்சிஜி, ஐடி, பிரைவேட் பேங்க், ஆயில் ஆண்ட் காஸ் குறியீடுகள் 0.60 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
 ரூபாய் மதிப்பு 29 காசு சரிவு
 பங்குச் சந்தையில் தொடர் மந்த நிலை மற்றும் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது உள்ளிட்ட காரணங்களால் அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 29 காசு சரிந்து 74.84-இல் நிலைபெற்றது. இதையடுத்து, 5 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.