உக்ரைன்-ரஷிய போர் எதிரொலி! பங்குச் சந்தையில் "கருப்பு வியாழன்': சென்செக்ஸ் 2,702 புள்ளிகள் வீழ்ச்சி
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை கருப்பு தினமாக அமைந்தது. உக்ரைனில் ரஷியா ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
புதுதில்லி: பங்குச் சந்தையில் வியாழக்கிழமை கருப்பு தினமாக அமைந்தது. உக்ரைனில் ரஷியா ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது.
கடந்த 6 நாள்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வியாழக்கிழமை மேலும் 2,702 புள்ளிகளை (4.72 சதவீதம்) இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணும் 815 புள்ளிகள் (4.78 சதவீதம்) சரிவடைந்தது.
சந்தை மூலதன மதிப்பு ரூ.13.44 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.242.24 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.13.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முன்பேர வர்த்தகத்தில் பிப்ரவரி மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்கும் தினமாகவும் இருந்ததால், ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
உக்ரைன் மீது ரஷியா அதிகாரபூர்வமாக ராணுவ நடவடிக்கையை எடுத்துள்ளதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது. உலக அளவில் அனைத்துச் சந்தைகளிலும் பங்குகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. ரஷிய பங்குச் சந்தை சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. ஆசியா, ஐரோப்பிய சந்தைகள் 4 சதவீதத்துக்கும் மேல் சரிவை எதிர்கொண்டன. அதன் தாக்கம், உள்நாட்டு சந்தையிலும் கடுமையாக எதிரொலித்தது. கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தையில், நேரம் செல்லச் செல்ல கொத்து, கொத்தாக பங்குகள் விற்பனை அதிகரித்தன. பங்குச் சந்தைக்கு வியாழக்கிழமை கருப்பு தினமாக அமைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமையும் சுமார் ரூ.3,417.16 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளதாக சந்தை பரிமாற்றத் தகவல்கள் தெரிவித்தன.
3,161 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,478 நிறுவனப் பங்குகளில் 231 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 3,161 பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தன. 86 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 72 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 279 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.
பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 9.80 கோடியாக உயர்ந்துள்ளது.
2,702 புள்ளிகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் தொடக்கத்திலேயே 1,813.61 புள்ளிகள் குறைந்து 55,418.45-இல் தொடங்கி, அதிகபட்சமாக 55,996.09 வரை உயர்ந்தது. பின்னர், 54,383.20 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 2,702.15 புள்ளிகளை இழந்து 54,529.91-இல் நிலைபெற்றது.
என்டிபிசி வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளும் 1.25 முதல் 8 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. இதில் இன்டஸ்இண்ட் பேங்க் 7.88 சதவீதம், எம் அண்ட் எம் 6.34 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், டெக் மஹிந்திரா, மாருதி சுஸூகி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், எச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏஷியன் பெயிண்ட், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 5 முதல் 6.30 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
மேலும், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், ஐடிசி, ஹெச்யுஎல், எச்டிஎஃப்சி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனப்பங்குகளும் கடும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 815 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 95 நிறுவனப் பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,839 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 815.30 புள்ளிகளை (4.78 சதவீதம்) இழந்து 16,247.95-இல் நிலைபெற்றது. காலையில் சுமார் 500 புள்ளிகள் குறைந்து 16,548.90 -இல் தொடங்கி, அதிகபட்சமாக 16,705.25 வரை உயர்ந்தது. பின்னர், 16,203.25 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில், 815.30 புள்ளிகளை இழந்து 17,647.95-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல்தரப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இருந்தன.
அனைத்துக் குறியீடுகளும் கடும் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துக் குறியீடுகளும் 3.50 முதல் 8.30 சதவீதம் வரை கடும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் 8.30 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஆயில் அண்ட் காஸ், ரியால்ட்டி, பிரைவேட் பேங்க், மெட்டல், மீடியா, ஐடி, பேங்க், ஆட்டோ, பைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகள் 5 முதல் 7.20 சதவீதம் குறைந்தன. மேலும், எஃப்எம்சிஜி, பார்மா, ஹெல்த்கேர், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 3 முதல் 4 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.
குறியீடு தொடக்கம் அதிகபட்சம் குறைந்தபட்சம் நிறைவு வீழ்ச்சி
சென்செக்ஸ் 55,418.45 55,996.09 54,383.20 54,529.91 2,702.15 (4.72%)
நிஃப்டி 16,548.90 16,705.25 16,203.25 16,247.95 815.30 (4.78%)
நிஃப்டி பேங்க் 36,085.20 36,709.15 34,991.35 35,228.10 2,163.95 (5.79%)