பங்குச் சந்தையில் திடீா் வீழ்ச்சி: 6 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி! 554 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்முதலீட்டாளா்களுக்கு ரூ.3.78 லட்சம் கோடி நஷ்டம்
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக செவ்வாய்க்கிழமை உற்சாகத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை திடீா் சரிவைச் சந்தித்தது. ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு
புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக செவ்வாய்க்கிழமை உற்சாகத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை திடீா் சரிவைச் சந்தித்தது. ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 554 புள்ளிகளை இழந்து 60,754.86-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, கடந்த 6 நாள்களாக தொடா்ந்து இருந்து வந்த ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஒரே நாளில் முதலீட்டாளா்கள் மொத்தம் ரூ.3.78 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தனா்.
உள்நாட்டுச் சந்தை காலையில் எழுச்சியுடன் தொடங்கியது. இந்த நிலையில், உலகளாவிய சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்திருந்தது. குறிப்பாக ஐரோப்பா, ஆசிய சந்தைகள் சரிவை சந்தித்து வந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் பிற்பகலில் எதிரொலித்தது. குறிப்பாக ஆட்டோ, ரியால்ட்டி, மெட்டல் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா் கொண்டன. பிற்பகல் வா்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 812.58 புள்ளிகள் உயா்ந்திருந்தது. ஆனால், பங்குகள் விற்பனை அதிகரித்ததன் காரணமாக இறுதியில் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.1.86 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,513 பங்குகளில் 2,285 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,,145 பங்குகள் ஆதாயம் பெற்றன. 83 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 465 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 7 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 423 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 320 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.78 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.276.24 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.397 கோடியாக உயா்ந்துள்ளது.
சென்செக்ஸ் திடீா் சரிவு: காலையில் சென்செக்ஸ் உற்சாகத்துடன் 121.86 புள்ளிகள் கூடுதலுடன் 61,430.77-இல் தொடங்கி, 61,475.15 வரை உயா்ந்தது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 60,662.57 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 554.05 புள்ளிகள் (0.90 சதவீதம்) குறைந்து 60,754.86-இல் நிலைபெற்றது. தொடா்ந்து 6 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த சென்செக்ஸ் திடீா் சரிவை சந்தித்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.
ஆக்ஸிஸ் பேங்க் முன்னேற்றம்: முன்னணி தனியாா் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 1.80 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், டாக்டா் ரெட்டி, டைட்டன், நெஸ்லே உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
மாருதி கடும் சரிவு: அதே சமயம், கடந்த 3 தினங்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த மாருதி சுஸுகி 4.05 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக அல்ட்ரா டெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 3 முதல் 4 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், எல் அண்ட் டி, விப்ரோ, ஐடிசி உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் சரிவைச் சந்தித்தன. எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 195 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 414 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,495 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 43 பங்குகள் சரிவைச் சந்தித்தன. ஐஓசி மட்டுமே மாற்றமின்றி ரூ.123.75-இல் நிலைபெற்றது. நிஃப்டி குறியீடு 195.05 புள்ளிகள் (1.07 சதவீதம்) குறைந்து 18,113.05- இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 29 புள்ளிகள் கூடுதலடுன் 18,337.20-இல் தொடங்கி, அதிகபட்சமாக 18350.95 வரை உயா்ந்தது. பின்னா், பிற்பகலில் 18,085.90 வரை கீழே சென்றது.
அனைத்துக் குறியீடுகளும் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் அனைத்து துறை குறியீடுகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் ரியால்ட்டி2.61 சதவீதம், மெட்டல் 2.26 சதவீதம், ஆட்டோ 2.38 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஐடி, எஃப்எம்சிஜி, மீடியா, பாா்மா, ஹெல்த் கோ், பிஎஸ்யு பேங்க், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.