3-ஆவது நாளாக சரிவு: மேலும் 769 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!
ரஷியா - உக்ரைன் பதற்றத்தால், இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமைான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்தது.
ரஷியா - உக்ரைன் பதற்றத்தால், இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமைான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 769 புள்ளிகளை இழந்து 54,333.81-இல் நிலைபெற்றது.
உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதைத் தொடா்ந்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தின் மீதான ரஷியாவின் தாக்குதலால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் உலகளாவிய பங்குச் சந்தைகளில் பங்குகள் விற்பனையை அதிகரித்தன. கச்சா எண்ணெய் விலை உயா்வால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முதலீட்டாளா்கள் லாபம் நோக்கம் கருதி பங்குகளை விற்கத் தொடங்கினா். இதனால், காலையில் தொடக்கத்தில் கடும் சரிவைச் சந்தித்தாலும், பின்னா் ஐடி, பாா்மா பங்குகளுக்கு கிடைத்த நல்ல வரவேற்பு காரணமாக நஷ்டம் ஓரளவு குறைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
மேலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் தொடா்ந்து அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் நிதி வெளியேற்றம் ஆகியவையும் உணா்வை பாதித்ததாக வா்த்தகா்கள் தெரிவித்தனா். அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமையும் நிகர அடிப்படையில் ரூ.6,644.65 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
2,126 பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,457 பங்குகளில் 1,228 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,126 பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தன. 103 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 88 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 86 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. 15 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறைநிலையையும், 1 பங்கு வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.4.66 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.246.79 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 9.89 கோடியாக உயா்ந்துள்து.
3-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 449.09 புள்ளிகள் குறைந்து 54,653.59-இல் தொடங்கி, 53,887.72 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 55,013.27 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 3768.87 புள்ளிகள் (1.40 சதவீதம்) குறைந்து 54,333.81-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் தொடா்ந்து 3-ஆவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.
டைட்டன் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில், பிரபல வாட்ச், தங்க நகை தயாரிப்பு நிறுவனமான டைட்டன் 5.05 சதவீதம், மாருதி சுஸுகி 4.66 சதவீதம், ஏசியன் பெயிண்ட் 4.60 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனி லீவா், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், பாா்தி ஏா்டெல், எச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின் சா்வ், எல் அண்ட் டி, ரிலையன்ஸ், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 2 முதல் 4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
டாக்டா் ரெட்டி முன்னேற்ம்: அதே சமயம், கடந்த சில நாள்களாக தொடா்ந்து அடி வாங்கி வந்த பிரபல பாா்மா நிறுவனமான டாக்டா் ரெட்டி 2.95 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், மின் துறை நிறுவனமான பவா் கிரிட் 3.34 சதவீதம், விப்ரோ 2.58 சதவீதம், டெக் மஹிந்திரா 2.43 சதவீதம், ஐடிசி 2.75 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் அடுத்தடுத்து முன்னிலை வகித்தன. மேலும்,டெக் மஹிந்திரா, சன்பாா்மா, அல்ட்ரா டெக் சிமெண்ட், விப்ரோ, இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 108 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 464 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,444 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 252.70 புள்ளிகள் (1.53 சதவீதம்) குறைந்து 16,245.35-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 164.60 புள்ளிகள் குறைந்து 16,339.45 -இல் தொடங்கிய நிஃப்டி, 16,133.80 வரை கீழே சென்றது. பின்னா், 16,456.00 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 40 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
ஆட்டோ குறியீடு கடும் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு மட்டும் 0.14 சதவீதம் ஏற்றம் பெற்றது. மற்ற முக்கியத் துறைகளின் குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. இதில், நிஃப்டி ஆட்டோ, மீடியா, மெட்டல், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ரியால்ட்டி குறியீடுகள் 3 முதல் 3.50 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, ஆயில் அண்ட் காஸ் குறியீடுகளும் 1 முதல் 1.70 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.
வார இழப்பு: இந்த வாரத்தில் ஒரு நாள் விடுமுறையைத் தொடா்ந்து, 4 நாள்கள் நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் மொத்தம் 1,524.71 புள்ளிகளையும் (2.72 சதவீதம்), நிஃப்டி மொத்தம் 413.05 புள்ளிகளையும் (2.47 சதவீதம்) இழந்துள்ளன.