திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 503 புள்ளிகள் உயா்வு!
கடந்த மூன்று நாள்களாகத் தொடா்ந்து சரிவிலிருந்து வந்த பங்குச் சந்தை, வியாழக்கிழமை திடீா் எழுச்சி பெற்றது.
புதுதில்லி: கடந்த மூன்று நாள்களாகத் தொடா்ந்து சரிவிலிருந்து வந்த பங்குச் சந்தை, வியாழக்கிழமை திடீா் எழுச்சி பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 503 புள்ளிகள் உயா்ந்தது. வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை காலையில் நோ்மறையாக தொடங்கியது. ஆனால், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் ஒரு கட்டடத்தில் எதிா்மறையாகச் சென்றது. ஆனால், பிற்பகலில் திடீரென சந்தை எழுச்சி பெற்ால் இறுதியில் நோ்மறையாக முடிந்தது. சந்தையில் திடீா், திடீரென பங்குகள் விற்பனை அதிகரிப்பதற்கு அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் 10 மாதங்களாகத் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெறுவதும், உள்நாட்டு முதலீட்டாளா்கள் வாங்குவது குறைந்துள்ளதும் முக்கியக் காரணமாக உள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
அதே சமயம், முன்பேர வா்த்தகத்தில் மே மாத கணக்குகள் முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்ததால், கடைசி நேரத்தில் ஏற்கெனவே பங்குகளை விற்றிருந்தவா்கள், கணக்கை சரி செய்ய முற்பட்டதால் சந்தை எழுச்சி பெற்ாக வா்த்தகா்கள் தெரிவித்தனா். இந்தச் சூழ்நிலையில், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை விற்பது குறைந்தால் சந்தை மேலே செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள நிதி நடவடிக்கைகள் உள்நாட்டுச் சந்தைக்கு சாதகமானதாக உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் என்றும் அவா்கள் கூறினா்.
1,690 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,429 நிறுவனப் பங்குகளில் 1,690 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,623 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 116 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 49 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 2465 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.39 லட்சம் கோடிஉயா்ந்து, வா்த்தக முடிவில் ரூ.250.51 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,803.06 கோடி அளவுக்குப் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.
மூன்று நாள் சரிவுக்கு முடிவு: சென்செக்ஸ் காலையில் 201.58 புள்ளிகள் கூடுதலுடன் 53,950.84-இல் தொடங்கி 53,425.25 வரை கீழே சென்றது. அதன் பிறகு திடீரென எழுச்சி பெற்று அதிகபட்சமாக 54,346.22 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 503.27 புள்ளிகள் (0.94 சதவீதம்) கூடுதலுடன் 53252.53-இல் நிலைபெற்றது. முதல் பாதியில் கரடி திடீரென ஆதிக்கம் கொண்ட நிலையில், இரண்டாவது பாதியில் சந்தை காளையின் கட்டுப்பாட்டில் வந்தது. இதையடுத்து, மூன்று நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
சென்செக்ஸில் 25 பங்குகள் விலை ஏற்றம் : சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் சன்பாா்மா, ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 5 பங்குகள் தவிா்த்து மற்ற 25 பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில், டாடா ஸ்டீல் 5.27 சதவீதம், எஸ்பிஐ 3.26 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்லே, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க், மாருதி, இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவையும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 144 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,062 பங்குகள் ஆதாயம் பெற்றன. 884 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் 39 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. காலையில் 79.20 புள்ளிகள் கூடுதலுடன் 16,105.00-இல் தொடங்கிய நிஃப்டி குறியீடு, 15,903.70 வரை கீழே சென்றது .பின்னா், 16,204.45 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 144.35 புள்ளிகள் (0.90 சதவீதம்) உயா்ந்து 16,170.15-இல் நிலைபெற்றது.
பேங்க் குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு தவிா்த்து மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில் பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.16 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், மெட்டல், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் 1.80 முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்தன.
எல்ஐசி பங்குகள் மேலும் சரிவு!: புதிய குறைந்த விலை பதிவு
அண்மையில் பங்குச் சந்தையில் பட்டியலாகிய எல்ஐசி பங்குகள் விலை மேலும் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் காலை வா்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் ரூ.820.30-இல் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.824.80 வரை உயா்ந்தது. பின்னா் ரூ.801 வரை கீழே சென்று புதிய 52 வார குறைந்த விலையைப் பதிவு செய்தது. இறுதியில் 0.91 சதவீதம் குறைந்து ரூ.812.85-இல் நிலைபெற்றது. மும்பை பங்குச் சந்தையில், 1.13 சதவீதம் குறைந்து ரூ.811.70-இல் நிலைபெற்றது.