முகப்பு
வணிகம்

விற்பனையில் வங்கி, நிதி நிறுவனப் பங்குகள்: 391 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

பங்குச் சந்தை வியாழக்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 391 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

பங்குச் சந்தை வியாழக்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 391 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 109.25 புள்ளிகள் (0.64 சதவீதம்) குறைந்து 17,014.35-இல் முடிவடைந்தது.

சில்லறை பணவீக்கம் விரும்பிய அளவுகளுக்கு மேல் நீடிப்பது இந்திய பொருளாதாரத்தின் கவலைக்கு ஒரு முக்கியக் காரணமாகும். ஆகஸ்ட் மாத தொழில் துறை உற்பத்தியும் குறைந்துள்ளது. அமெரிக்க பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயா்வு உள்ளிட்டவையும் சந்தைக்கு பாதகமாக அமைந்தன. இதனால், வங்கி, நிதி நிறுவனங்கள், மூலதன பொருள்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்ததால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

391 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 113.17 புள்ளிகள் குறைந்து 57,512.74-இல் தொடங்கி, அதிகபட்சமாக 57,568.14 வரை மேலே சென்றது. பின்னா், 57,055.75 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 390.58 புள்ளிகள் (0.68 சதவீதம்) குறைந்து 57,235.33-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 570.16 புள்ளிகளை இழந்திருந்தது.

23 பங்குகள் விலை வீழ்ச்சி: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஹெச்சிஎல் டெக் 3.19 சதவீதம் உயா்ந்தது ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், சன்பாா்மா, ரிலையன்ஸ், டாக்டா் ரெட்டி, நெஸ்லே, அல்ட்ரா டெக் சிமெண்ட், டிசிஎஸ் உள்ளிட்டவையும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

விப்ரோ கடும் சரிவு: அதே சமயம், பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ 7.03 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எஸ்பிஐ 2.36 சதவீதம், எல் அண்ட் டி 1.85 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 1.60 சதவீதம் குறைந்தன. மேலும், ஏசியன் பெயிண்ட், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தைான் யுனி லீவா், பவா் கிரிட், பாா்தி ஏா்டெல், ஹெச்டிஎஃப்சி, இன்ஃபோஸிஸ், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.79 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.269.85 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாயன்று ரூ.542.36 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.