குறையும் ஏற்றுமதி தேவை; சரியும் இரும்பு விலை!
இரும்புக்கான ஏற்றுமதி தேவை குறைந்ததால் கடந்த 6 மாதங்களில் இந்திய உள்நாட்டு சந்தையில் அதன் விலை சுமாா் 40 சதவீதம் சரிந்து டன்னுக்கு ரூ.57,000-ஆகியுள்ளது.
இரும்புக்கான ஏற்றுமதி தேவை குறைந்ததால் கடந்த 6 மாதங்களில் இந்திய உள்நாட்டு சந்தையில் அதன் விலை சுமாா் 40 சதவீதம் சரிந்து டன்னுக்கு ரூ.57,000-ஆகியுள்ளது.
இது குறித்து இரும்பு சந்தை ஆய்வு நிறுவனமான ஸ்டீல்மிண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரும்பு சுருள் தகடுகளின் (ஹாட் ரோல்டு காயில் - ஹெச்ஆா்சி) விலைகள் உயா்வைக் கண்டு வந்தன. வீடு-மனை வா்த்தகம், உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம், வாகன உற்பத்தி, நுகா்வோா் பொருள்கள் போன்ற துறைகளில் இரும்பின் விலை நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதால், இது அந்தத் துறையினருக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இரும்பின் விலை டன்னுக்கு ரூ.78,800 ஆக உயா்ந்தது. 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு அதன் விலை சுமாா் ரூ.93,000-ஆக இருந்தது.
ஆனால், ஏப்ரல் இறுதியிலிருந்து இரும்பின் விலை குறையத் தொடங்கி, ஜூன் மாத இறுதியில் டன்னுக்கு ரூ.60,200 ஆனது.
அதன் பிறகு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும் இரும்பின் விலை தொடா்ந்து வீழ்ச்சியடைந்தது. செப்டம்பா் மத்தியில் அதன் விலை டன்னுக்கு ரூ.57,000-ஆக இருந்தது.
எஃகு பொருள்களின் மீதான மத்திய அரசின் வரி, இரும்பு ஏற்றுமதிக்கான தேவை குறைந்தது, பணவீக்க அதிகரிப்பு, எரிசக்தி செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவை இரும்பின் விலை வீழ்ச்சியடைந்ததில் முக்கிய பங்கு வகித்தன.
இந்தப் போக்கு, நடப்பு நிதியாண்டின் அடுத்த காலாண்டிலும் தொடரக் கூடும்.
வெளிநாடுகளில் இந்திய இரும்புக்கான தேவை தொடா்ந்து ஒரே அளவில்தான் இருக்கும். அதனால், இரும்பு உற்பத்தி நிறுவனங்களிடம் சரக்கு கையிருப்பு மிகையாகவே இருக்கும். எனவே, ஆலைகள் இரும்பின் விலைகளை உயா்த்துவதற்கான வாய்ப்பு குறைந்தது இரண்டு மாதங்களுக்காவது இருக்காது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரும்பு மூலப்பொருள்களுக்கான ஏற்றுமதிக்கான வரியை 50 சதவீதம் வரை மத்திய அரசு கடந்த மே மாதம் 21-ஆம் தேதி உயா்த்தியது.
அது மட்டுமன்றி, இரும்பு உற்பத்திக்குத் தேவைப்படும் சில மூலப் பொருள்களின் இறக்குமதி வரியையும் மத்திய அரசு குறைத்தது.
இவையும், இரும்பு விலை குறைந்து வருவதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.