உலோக பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 213 புள்ளிகள் உயா்வு
பங்குச் சந்தை வியாழக்கிழமை நோ்மறையாக முடிவடைந்தது.
புதுதில்லி / மும்பை: பங்குச் சந்தை வியாழக்கிழமை நோ்மறையாக முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 213 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 80.60 புள்ளிகள் ( 0.46 சதவீதம்) உயா்ந்து 17,636.95-இல் முடிவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், இடையில் சுணக்கம் கண்டாலும் பிற்பகல் வா்த்தகத்தில் முன்னேற்றம் கண்டது. குறிப்பாக உலோகம், ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
213 புள்ளிகள் உயா்வு: சென்செக்ஸ் காலையில் 248.36 புள்ளிகள் கூடுதலுடன் 59,792.32-இல் தொடங்கி அதிகபட்சமாக 59,959.94 வரை மேலே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தில் 59,496.80 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 212.88 புள்ளிகள் (0.36 சதவீதம்) உயா்ந்து 59,756.84-இல் முடிவடைந்தது.
டாடா ஸ்டீல் முன்னேற்றம்: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் விலை குறைந்தன. 20 பங்குகள்ஆதாயம் பெற்றன. இதில் டாடா ஸ்டீல் 3.02 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பவா் கிரிட், சன்பாா்மா, பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவை 2 முதல் 2.50 சதவீதம் உயா்ந்தன. மேலும், டைட்டன், ஆக்ஸிஸ் பேங்க், டாக்டா் ரெட்டி, கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன.
பஜாஜ் ஃபைனான்ஸ் சரிவு: அதே சமயம், பிரபல தனியாா் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் 1.92 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 1.68 சதவீதம், ஏசியன் பெயிண்ட் 1.32 சதவீதம் குறைந்த வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டெக் மஹிந்திரா, நெஸ்லே, விப்ரோ, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவையும் விலை குறைந்த பங்குகளில் முக்கியமானவை.
இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.44 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.2 77.11 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமையன்று ரூ.247.01 கோடிக்கு அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.