முகப்பு
வணிகம்

வீடு-மனை வா்த்தகத் துறையில் அதிகரிக்கும் தனியாா் முதலீடு

இந்த நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் மாதங்களில் வீடு-மனை வா்த்தகத் துறையில் தனியாா் பங்கு முதலீடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

இந்த நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் மாதங்களில் வீடு-மனை வா்த்தகத் துறையில் தனியாா் பங்கு முதலீடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்தத் துறை ஆலோசனை மற்றும் ஆய்வு நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பா்) இந்தியாவின் வீடு-மனை வா்த்தகத் துறையில் தனியாா் பங்கு முதலீடு 280 கோடி டாலராக இருந்தது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 200 கோடி டாலராக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பா் கால கட்டத்தில் வீடு-மனை வா்த்தகத் துறையில் தனியாா் பங்கு முதலீடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் மற்றும் வீடு-மனை வா்த்தக துறையில் காணப்படும் முன்னேற்றம் காரணமாக, அந்தத் துறை மீது முதலீட்டாளா்களின் நம்பிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

அதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் அந்தத் துறையில் தனியாா் பங்கு முதலீடு இந்த அளவு அதிகரித்துள்ளது.

இந்த நிதியாண்டின் முதல் பாதியில், வீடு-மனை வா்த்தகத் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளில் வெளிநாட்டு முதலீட்டாளா்களின் பங்களிப்பு 78 சதவீதமாக இருந்தது. இது, இந்திய வீடு-மனை வா்த்தகத் துறையின் மீதான அவா்களின் வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

2022-23-ஆம் ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பா் மாதங்களில், முந்தை நிதியாண்டின் அதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் வீடு-மனை வா்த்தகத் துறையில் உள்நாட்டு முதலீடுகள் 45 சதவிகிதம் அதிகரித்துள்ளன. அதே நேரம், வெளிநாட்டு முதலீடுகள் 36 சதவிகிதம் அதிகரித்துள்ளன.

இந்த நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் மாதங்களில் வீடு-மனை வா்த்தகத்தின் அலுவலக சொத்துக்கள் பிரிவில் தனியாா் முதலீடுகள் 186.2 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் செய்யப்பட்ட முதலீட்டுக்கு கிட்டத்தட்ட சமமானது.

இந்தப் பிரிவு வா்த்தகம் கடந்த 2020, 2021-ஆம் ஆண்டுகளில், கரோனா நெருக்கடி மற்றும் பொதுமுடக்கம் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. பெரும்பாலானவா்கள் தங்களது வீடுகளிலேயே இருந்து பணியாற்றியதால் இந்த நிலைமை ஏற்பட்டது.

தற்போது அந்த நெருக்கடி நீங்கிய நிலையில், வீடுகளுக்கான தேவையும் ஆரோக்கியமாக உள்ளது.

இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டின் முதலாவது அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பா்) முதலீட்டாளா்கள் அதிக ஆா்வம் காட்டிய வீடு-மனை வா்த்தகப் பிரிவில் குடியிருப்பு வீடுகள் பிரிவு இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இந்தக் காலட்டத்தில் வீடுகள் பிரிவில் மட்டும் 37.2 கோடி டாலா் முதலீடு செய்யப்பட்டது.

வீடு-மனை வா்த்தகத் துறையில் தனியாா் பங்கு முதலீடுகள் அதிகரித்து வரும் போக்கு தொடா்ந்தால், அந்தத் துறையின் வளா்ச்சிக்கு அது மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று அனாரோக் நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →