வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி முன்னேற்றம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 213 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 213 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், ஐரோப்பிய சந்தைகள் வலுவாக இருந்ததைத் தொடர்ந்து அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. இதனால், காளையின் எழுச்சி இருந்தது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக தவிப்பில் இருந்து வந்த தனியார், பொதுத் துறை வங்கி பங்குகளுக்கு திடீரென கிடைத்த வரவேற்பு சந்தை 3-ஆவது நாளாக வலுப்பெற உதவியாக இருந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.05 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.300.01 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.495.17 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 80.90 புள்ளிகள் கூடுதலுடன் 65,300.93-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,108.51 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 65,504.71 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 213.27 புள்ளிகள் (0.33 சதவீதம்) கூடுதலுடன் 65,433.30-இல் முடிவடைந்தது.
17 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 13 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 17 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,205 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 826 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 48 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 51 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 42.75 புள்ளிகள் கூடுதலுடன் 19,439.20-இல் தொடங்கி, 19,366.60 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 19,472.05 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 47.55 புள்ளிகள் (0.25 சதவீதம்) கூடுதலுடன் 19,444.00-இல் நிறைவடைந்தது.
இறங்குமுகத்தில் ஜியோ ஃபைனான்ஸ்!
இந்த வாரத்தின் முதல் வர்த்த தினமான திங்கள்கிழமை புதிதாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முகேஷ் அம்பானியின் ஜியோ ஃபைனானசியல் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனப் பங்குகள் தொடர்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமையும் குறைந்தபட்ச உறை நிலையான (லோயர் ஃப்ரீஸ்) 5 சதவீதம் குறைந்து ரூ.227.25-இல் நிலைபெற்றது. இதனால், மிகவும் ஆர்வத்துடன் ஜியோ ஃபைனான்ஸ் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள், தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருப்பதாக சந்தை வட்டாரத்தில் பேசப்படுகிறது.