பங்குச் சந்தையில் மீண்டும் ‘கரடி’: சென்செக்ஸ் 502 புள்ளிகள் வீழ்ச்சி!
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை மீண்டும் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 502 புள்ளிகளை
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை மீண்டும் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 502 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 129.00 புள்ளிகள் (0.74 சதவீதம்) குறைந்து 17,321.90-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. ஆசியா, ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகம் எதிா்மறையாக இருந்து வந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. 8 நாள் தொடா் சரிவுக்கு புதன்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் சந்தையில் கரடி ஆதிக்கம் கொண்டுள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது முதலீட்டாளா்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சரிவு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.94 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.259.99 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) புதனன்று ரூ.424.88 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 123.90 புள்ளிகள் குறைந்து 59,287.18-இல் தொடங்கி அதிகபட்சமாக 59,423.79 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 58,866.26 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 501.73 புள்ளிகள் (0.84 சதவீதம்) குறைந்து 58,909.35-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 6 பங்குகள் மட்டுமேஆதாயப் பட்டியலில் வந்தன. 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
சன்பாா்மா மூன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் சன்பாா்மா, பவா் கிரிட், ஹெச்சிஎல் டெக், எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகிய 6 நிறுவனப் பங்குகள் மட்டும் 0.20 முதல் 0.60 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.
மாருதி, ஆக்ஸிஸ் பேங்க் கடும் சரிவு: பிரபல காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 2.42 சதவீம்த, பிரபல தனியார வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 2.29 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, டிசிஎஸ், எம் அண்ட் எம், இன்ஃபோஸிஸ், நெஸ்லே, டெக் மஹிந்திரா, பாா்தி ஏா்டெல், டாடா மோட்டாா்ஸ், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், முன்னணி நிறுவனப் பங்குகளான ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், ஐடிசி, விப்ரோ, ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவா் ா் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.