சென்செக்ஸ் 542 புள்ளிகள் வீழ்ச்சி: 3 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி
பங்குச் சந்தை வியாழக்கிழமை எதிா்மறையாக முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 5423 புள்ளிகளை இழந்தது.
பங்குச் சந்தை வியாழக்கிழமை எதிா்மறையாக முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 5423 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 164.80 புள்ளிகள் (0.93 சதவீதம்) குறைந்து 17,589.60-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, 3 நாள் தொடா் முன்னேற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், முக்கிய கரன்சிகளுக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்ததும் வா்த்தகா்களின் உணா்வுகளைப் பாதித்தது. மெட்டல் குறியீடு தவிர மற்றவை நஷ்டத்தைச் சந்தித்தன. குறிப்பாக வங்கி, நிதிநிறுவனங்கள், ஆட்டோ, ஐடி. ரியால்ட்டி பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. மேலும், முன்பேர வா்த்தகத்தில் வாராந்திர கணக்கு முடிக்க கடைசி நாளாக இருந்ததன் தாக்கமும் சந்தையில் எதிரொலித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.93 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.264.31 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த புதனன்று ரூ.3,671.56 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 119 புள்ளிகள் கூடுதலுடன் 60,467.09-இல் தொடங்கி அதற்கு மேல் செல்லவில்லை. பின்னா், 59,750.53 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 541.81 புள்ளிகள் (0.90சதவீதம்) குறைந்து 59,806.28-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
டாடா ஸ்டீல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 1.55 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எல் அண்ட் டி, பாா்தி ஏா்டெல், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, நெஸ்லே, ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவையும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.
எம் அண்ட் எம், ரிலையன்ஸ் கடும் சரிவு: அதே சமயம், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 3.31 சதவீதம், ரிலையன்ஸ் 2.37 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபின் சா்வ், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுஸுகி, டாடா மோட்டாா்ஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனி லீவா், எஸ்பிஐ உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன. மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக் மற்றும் ஹெச்டிஎஃப்சி உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.