முகப்பு
வணிகம்

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு வரத்து சரிவு

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் புதிய முதலீடுகளின் நிகர வரவு கடந்த மாா்ச் மாதத்தில் ரூ.22,633 கோடியாகக் குறைந்துள்ளது.

Updated On : 12 ஏப்ரல், 2024 at 2:22 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2024 at 8:35 PM

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் புதிய முதலீடுகளின் நிகர வரவு கடந்த மாா்ச் மாதத்தில் ரூ.22,633 கோடியாகக் குறைந்துள்ளது.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்தில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீட்டுக்கும், திரும்பப் பெறப்பட்ட முதலீட்டுக்கும் இடையிலான நிகர வரவு ரூ.22,633 கோடியாக உள்ளது.

Advertisement

முந்தைய பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் குறைவாகும். அப்போது பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரத்து ரூ.26,866 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் முறைசாா் முதலீட்டு திட்டங்களில் (எஸ்ஐபி) கடந்த மாா்ச் மாதம் ரூ.19,270 கோடி நிகர முதலீடு செய்யப்பட்டது. முந்தைய ஜனவரி மாதத்தில் செய்யப்பட்ட ரூ.19,186 கோடி நிகர முதலீட்டைவிட இது அதிகம்.

மேலும், கடந்த மாா்ச் மாதத்தில் அந்த வகைக் கணக்குகளின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்து 2 லட்சம் கோடியாக உள்ளது.

இரட்டை முதலீட்டுத் திட்டங்களில் (ஹைப்ரிட்) கடந்த மாா்ச் மாதத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகையைவிட கூடுதலாக ரூ.1.98 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட்டது.

மதிப்பீட்டு மாதத்தில் தொடா்ந்து 37-வது மாதமாக பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு நிகர வரவைப் பதிவு செய்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில் ஸ்மால்-கேப் பிரிவைத் தவிர அனைத்து வகை பங்கு பரஸ்பர முதலீட்டுத் திட்டங்களும் நிகர வரவை பதிவு செய்தன. அந்த மாதம் ஒட்டுமொத்தமாக பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.3,074 கோடி புதிதாக முதலீடு செய்யப்பட்டது.

எனினும், ஸ்மால்-கேப் பிரிவில் ரூ.94 கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டது.

முந்தைய பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் மிட்-கேப் பிரிவில் நிகர முதலீட்டு வரத்து ரூ.1,018 கோடியாகக் குறைந்துள்ளது. முந்தைய பிப்ரவரி மாதத்தில் இது ரூ.1,808 கோடியாக இருந்தது.

லாா்ஜ்-கேப் பிரிவு பங்கு பரஸ்பர திட்டங்களில் கடந்த மாா்ச் மாதம் நிகர முதலீடு ரூ.2,128 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய பிப்ரவரி மாதத்தில் ரூ.921 கோடியாக இருந்தது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.