12 சதவீத வளா்ச்சி கண்ட நிலக்கரித் துறை
புது தில்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் 8 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் முதன்மையான நிலக்கரி துறை 11.6 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் நிலக்கரி துறையின் உற்பத்தி செயல்திறனைக் குறிக்கும் குறியீட்டு எண் 212.1 புள்ளிகளாகப் பதிவானது.
முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 190.1 புள்ளிகளாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நிலக்கரி துறையின் குறியீட்டு எண் மதிப்பீட்டு மாதத்தில் 11.6 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
2023-24 நிதியாண்டின் ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் நிலக்கரி துறையின் குறியீட்டு எண் முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட 12.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிலக்கரி, சிமென்ட், கச்சா எண்ணெய், மின்சாரம், உரம், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், எஃகு ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் ஒருங்கிணைந்த உற்பத்தி செயல்திறனை அளவிடும் குறியீட்டு எண், முந்தைய 2023-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த பிப்ரவரியில் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தி புதிய உச்சத்தைத் தொட்டது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் 93.7 கோடி டன்னாக இருந்த அவற்றின் உற்பத்தி, 2023-24-ஆம் நிதியாண்டில் 100 கோடி டன் என்ற மைல்கல்லை முதல்முறையாகக் கடந்து சாதனை படைத்தது.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 70 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. 2022-23 நிதியாண்டில் 3.08 கோடி டன்னாக இருந்த நிலக்கரி இறக்குமதி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 2.22 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி குறைந்ததால் ரூ.82,264 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.