பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! 3% சரிந்த சென்செக்ஸ்; ரூ.17 லட்சம் கோடி இழப்பு
முதலீட்டாளர்களுக்கு ரூ. 17 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வாரத்தின் முதல் நாளான இன்று (ஆக. 5) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 3 சதவீதம் வரையிலும், நிஃப்டி 2.6 சதவீதம் வரையிலும் சரிந்தது.
இதனால் ஏராளமான நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தது. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு ரூ. 17 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வணிக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,222.55 புள்ளிகள் சரிந்து 78,759.40 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது 2.74% சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 662.10 புள்ளிகள் சரிந்து 24,055.60 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 2.68% சரிவாகும்.
வெள்ளிக்கிழமை வணிகத்தின்போது 24,717.70 புள்ளிகளுடன் நிஃப்டி நிறைவு பெற்றது. திங்கள்கிழமை வாரத்தின் முதல் நாளான இன்று 400 புள்ளிகள் வரை சரிந்து 24,302.85 என்ற புள்ளிகளுடன் தொடங்கியது. வணிகத்தின் மத்தியில் 24,350.05 புள்ளிகள் வரை ஏற்றம் பெற்றது. எனினும் வணிக நேர முடிவில், சற்று சரிந்து 24,055.60 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால், முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட பதற்றத்தால் பங்குச்சந்தை உலக அளவில் கடும் சரிவை சந்தித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை மட்டுமின்றி, ஆசியாவில் சியோல் (தென்கொரியா), டோக்கியோ (ஜப்பான்), ஷாங்காய் (சீனா), ஹாங்காங் பங்குச்சந்தை வணிகமும் கடும் சரிவை சந்தித்தன.
ஜப்பானின் நிக்கேயி பங்குகள் 4,451.28 புள்ளிகள் சரிந்தது. இது மொத்த வணிகத்தில் 12% ஆகும். இது கடந்த வெள்ளிக்கிழமை 8.5% ஆக சரிந்திருந்தது. கடந்த இரு வணிக நாள்களில் மட்டும் 18.2% சரிவை சந்தித்துள்ளது ஜப்பான்.
இந்தியாவில் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 தர நிறுவனங்களில் 2 நிறுவனங்கள் மட்டுமே ஏற்றத்துடன் இருந்தன. எஞ்சிய 28 நிறுவனத்தின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன.
அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் பங்குகள் 6% வரை சரிவை சந்தித்தது. இதேபோன்று அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஜேஎஸ்டபிள்யூ ஆகிய நிறுவனப் பங்குகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்தன.
ஹிந்துஸ்தான் யூனிலிவர், நெஸ்ட்லே பங்குகள் மட்டும் நேர்மறையாக இருந்தன.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஏற்றத்துடன் இருந்தன. எஞ்சிய 46 நிறுவனத்தின் பங்குகள் சரிவுடன் முடிந்தன.
பங்குச்சந்தை சரிவுக்கு காரணம்
அமெரிக்காவின் பொருளாதார அசாதாரண நிலை, அந்நாட்டின் ஜி.டி.பி. சரிவு ஆகியவை சர்வதேச சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை நிலை மோசமடைந்துள்ளது.
அமெரிக்காவில் ஜூன் மாதத்தில் 4.1% ஆக இருந்த வேலையின்மை விகிதம், கடந்த மாதம் (ஜூலை) 4.3% ஆக அதிகரித்துள்ளது. இது உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் ஆகியவை பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.