வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (டிச. 12) பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது.
கடந்த வெள்ளிக்கிழமையும் சரிவுடன் முடிந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக (திங்கள் கிழமை) பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது.
சென்செக்ஸ் 200 புள்ளிகளும் நிஃப்டி 24,650 புள்ளிகளுக்கு கீழும் சரிந்திருந்தது. மீடியா மற்றும் நுகர்வோர் பொருள்கள் துறை அதிகபட்சமாக 2% வரை சரிந்தது.
சென்செக்ஸ் நிலவரம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 200.66 புள்ளிகள் சரிந்து 81,508.46 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.25 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 58.80 புள்ளிகள் சரிந்து 24,619 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.24 சதவீதம் சரிவாகும்.
வணிக நேரத் தொடக்கத்தில் 70 புள்ளிகள் சரிந்து 81,602.58 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 81,783.28 புள்ளிகள் வரை உயர்ந்தது. எனினும் பிற்பாதியில் படிப்படியாக சரிந்து, அதிகபட்சமாக 81,411.55 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 200 புள்ளிகள் சரிந்து 81,508 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 16 நிறுவனப் பங்குகள் சரிவுடன் முடிந்தன.
அதிகபட்சமாக ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் நிறுவனப் பங்குகள் -3.35% சரிந்தது. இதற்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் -2.21%, ஆக்சிஸ் வங்கி -1.80%, நெஸ்ட்லே இந்தியா -1.72%, ஏசியன் பெயின்ட்ஸ் -1.56%, ஐடிசி -1.32%, ரிலையன்ஸ் -1.26%, இந்தஸ் இந்த் வங்கி -0.79% சரிவுடன் காணப்பட்டன.
எனினும் அதிகபட்சமாக எல்&டி பங்குகள் 2.09% உயர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து டாடா ஸ்டீல் 1.08%, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் 0.81%, எச்.டி.எஃப்.சி. வங்கி 0.77%, அதானி போர்ட்ஸ் 0.62%, கோட்டாக் வங்கி 0.53%, பார்தி ஏர்டெல் 0.30%, பஜாஜ் ஃபைனான்ஸ் 0.27% உயர்வுடன் காணப்பட்டன.
நிஃப்டி நிலவரம்
வணிக நேரத் தொடக்கத்தில் 24,633 புள்ளிகளுடன் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக
24,580 புள்ளிகள் வரை சரிந்தது. எனினும் பிறகு படிப்படியாக உயர்ந்து 24,705 புள்ளிகள் வரை சென்றது. வணிக நேர முடிவில் 58 புள்ளிகள் சரிந்து 24,619 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் விப்ரோ, எல்&டி, எஸ்பிஐ லைஃப், டாடா ஸ்டீல், பிபிசிஎல், எச்டிஎஃப்சி லைஃப், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்திருந்தன.
நிஃப்டி 500-ல் 261 நிறுவனப் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
சரிவுக்கு காரணம்
துறை ரீதியாக ஐடி, மெட்டல் துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. நுகர்வோர் பொருள்கள் துறை, மீடியா துறை பங்குகள் 2% வரை சரிவுடன் இருந்தது. பொதுத் துறை வங்கிகள், வாகனங்கள், எனர்ஜி துறைகள் 0.5% வரை சரிந்திருந்தன.
கடந்த வார வணிகத்தில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களிடையே நிலவிய ஆர்வமின்மையே சரிவுக்கு காரணம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.