பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் 3 கோடி வீடுகள்கட்ட நிதியுதவி அளிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து தேசிய பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகள் உயர்வை சந்தித்தன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், "பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் பயனடைய தகுதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டு, புதிதாக 3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகளைக் கட்ட அரசு நிதியுதவி அளிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தகுதியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளைக் கட்ட நிதியுதவி அளிப்பதற்கு கடந்த 2015-16-ஆம் ஆண்டுமுதல் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தை (பிஎம்ஏஒய்) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ், கடந்த 10 ஆண்டுகளில் தகுதியுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் கட்டப்படும் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகள், சமையல் எரிவாயு இணைப்பு, மின் இணைப்பு மற்றும் குழாய் மூலம் நீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிற திட்டங்களின் மூலம் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.2.75 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
எனவே, வருங்காலத்தில் இந்த திட்டத்தின் கீழ் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் 3 கோடி வீடுகள் கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பினால், செவ்வாயக்கிழமை, 10 ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் இன்று உயர்வை சந்தித்தன.
மஹ்லைஃப் ப்ரஸ்டீஜ், போனிக்ஸ் லிமிடட், டிஎல்எஃப், கோத்ரேஜ் குழுமம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் உயர்வை சந்தித்த நிலையில், பிரிகேட், லோதா, ஷோபா, சன்டெக் நிறுவனப் பங்குகளும் ஏறுமுகத்தில் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.