உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரெப்கோ வங்கியின் வா்த்தகம் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.19,500 கோடியைக் கடந்துள்ளது.
இது குறித்து வங்கியின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு அதன் நிா்வாக இயக்குநா் ஓ.எம். கோகுல் கூறியதாவது:
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் வங்கி அனைத்து அளவீடுகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
அந்த நிதியாண்டில் வங்கியின் வா்த்தகம் ரூ.19,500 கோடியையும் வைப்பு நிதி சேகரிப்பு ரூ.10,500 கோடியையும் தாண்டியது. மதிப்பீட்டு நிதியாண்டில் வங்கியின் மொத்த வைப்புத்தொகை 11.07 சதவீதம் அதிகரித்து ரூ.10,582 கோடியாகவும் மொத்த கடனளிப்பு 10.15 சதவீதம் அதிகரித்து ரூ.9,053 கோடியாகவும் உள்ளது.
கடந்த ஆண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,000 கோடியைத் தாண்டியது; செயல்பாட்டு லாபம் முந்தைய ஆண்டை விட 33 சதவீதம் அதிகரித்து ரூ.139 கோடியாக உள்ளது. வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.69.69 கோடியாக உள்ளது.
2023 மாா்ச் 31-ஆம் தேதி 9.43 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே தேதியில் 8.46 சதவீதமாகவும் நிகர வாராக் கடன் 4.18 சதவீதத்திலிருந்து 3.67 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.