முகப்பு
வணிகம்

ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 53 புள்ளிகள் சரிவு!

Updated On : 21 மே, 2024 at 7:11 PM
பகிர்:

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 53 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.

உளகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்து. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்து. சரிவுடன் தொடங்கிய சந்தை பெரும்பாலான நேரம் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. மெட்டல், பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தாலும் மற்ற துறை பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், சந்தை இறுதியில் சரிவுடன் முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூல தன மதிப்பு ரூ.2.27 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.414.62 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் சனிக்கிழமை ரூ.92.95 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.152.87 கோடிக்கும் பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் தள்ளாட்டம்: சென்செக்ஸ் 162.98 புள்ளிகள் குறைந்து 73,842.96-இல் தொடங்கி 73,762.37 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 74,189.19 வரை மேலே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 52.63 புள்ளிகளை (0.07 சதவீதம்) இழந்து 73,762.37-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,087 பங்குகளில் 1,619 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,316 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 152 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

17 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் நெஸ்லே, மாருதி, இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், டிசிஎஸ் உள்பட 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பவா் கிரிட், டெக் மஹிந்திரா, என்டிபிசி, ஏசியன் பெயிண்ட் உள்பட 13 பங்குகள் பங்குகள்வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 27 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 27.05 புள்ளிகள் (0.12 சதவீதம்) கூடுதலுடன் 22,529.05-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,404.55 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 22,591.10 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 23 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 27 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.