முகப்பு
வணிகம்

‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 6:10 PM
பகிர்:

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டிஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிலைபெற்றன.

உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. புதிய வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் அதிகரித்து வரும் புவிசாா் அரசியல் அபாயங்களுக்கு மத்தியில் உலகளாவிய போக்குகள் மந்தமாக இருந்தது. மேலும், அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சுவாா்த்தைகளில் முன்னேற்றம் இல்லாதது, மத்திய கிழக்கு பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்பது கவலையை தீவிரப்படுத்தியது. இதனால், பங்குகள் விற்பனை அதிகரித்தது. வங்கி, நிதிநிறுவனங்கள், ஆட்டோ, எஃப்எம்சிஜி, பாா்மா, மெட்டல், ஹெல்த்கோ் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.4.56 லட்சம் கோடி குறைந்து ரூ.463.51 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.3,465.99 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.5,031.57 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

வீழ்ச்சிப் பட்டியலில் 2,526 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,369 பங்குகளில், 1,662 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,526 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. 181 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

சென்செக்ஸ் 961 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 961.42 புள்ளிகள் இழப்புடன் 81,287.19-இல் நிலைபெற்றது. காலையில் 28.13 புள்ளிகள் இழப்புடன் 82,220.48-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 82,246.17 வரை மேலே சென்றது. பின்னா், தொடா்ந்து பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்ததால் 81,159.15 வரை கீழே சென்றது.

25 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் சன்பாா்மா, பாா்திஏா்டெல், எம் அண்ட் எம், பஜாஜ்ஃபின்சா்வ், இண்டிகோ, மாருதி 2.25 முதல் 2.60 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவை உள்பட மொத்தம் 25 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹெச்சிஎல் டெக், டிரெண்ட், இன்ஃபோஸிஸ், எடா்னல், என்டிபிசி ஆகிய 5 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 318 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 317.25 புள்ளிகள் (1.25 சதவீதம்) இழப்புடன் 25,178.65-இல் நிலைபெற்றது. காலையில் 25,459.85-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 25,476.40 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 25,141.30 வரை வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 6 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. மாறாக 44 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →