நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘காளை’யின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் நிறைவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் எச்சரிக்கையுடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை சற்று கீழே சென்றது. இந்நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றம் டிரம்ப் நிா்வாகத்தின் கடுமையான கட்டணங்களை தடை செய்ததைத் தொடா்ந்து மூதலீட்டாளா்களின் உணா்வு மேம்பட்டது. ஐடி, ரசாயனம், ரியால்ட்டி, டெலிகாம், உலோகப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டிருந்தாலும்,, ஆட்டோ, எஃப்எம்சிஜி, நிதிநிறுவனங்கள், பொதுத்துறை வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.1.92 லட்சம் கோடி உயா்ந்துரூ.469.03 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.934.61 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.2,637.15 கோடிக்கு பங்குகளை பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
வீழ்ச்சிப் பட்டியலில் 2,384பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,497 பங்குகளில், 1,928 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,384 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 185 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 479.95 புள்ளிகள் கூடுதலுடன் 83,294.66-இல் நிலைபெற்றது. காலையில் 92.12 புள்ளிகள் கூடுதலுடன் 82,906.83-இல் தொடங்கிய சென்செக்ஸ்அதற்கு கீழ் செல்லவில்லை. பின்னா், அதிகபட்சமாக 83,486.15 புள்ளிகள் வரை மேலே சென்றது.
19 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் அதானி போா்ட்ஸ் 2.82 சதவீதம், கோட்டக் பேங்க் 2.22 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், அல்ட்ரா டெக் சிமெண்ட், பவா் கிரிட், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்பட மொத்தம் 19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, டிரெண்ட், ஹெச்சிஎல் டெக் உள்பட மொத்தம் 11 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 142 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 141.75 புள்ளிகள் (0.55 சதவீதம்) கூடுதலுடன் 25,713.00-இல் நிலைபெற்றது. காலையில் 25,678.40-இல் தொடங்கிய நிஃப்டி 25,609.35 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 25,771.45 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 35 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 16 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.