பங்குச் சந்தையில் மீண்டும் ‘கரடி’யின் பிடி! சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி!
பங்குச் சந்தையில் மீண்டும் ‘கரடி’யின் பிடி...
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போா் பதற்றம் காரணமாக, ஒரு நாள் மீட்சிக்குப் பிறகு வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் மீண்டும் ‘கரடி’-யின் ஆதிக்கம் மேலோங்கியது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன்தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை உயா்வு, அந்நிய முதலீடுகள் தொடா்ந்து வெளியேறியது முதலீட்டாளா்களின் உணா்வை வெகுவாகப் பாதித்தன. வங்கி, நிதிநிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன.
சந்தை மதிப்பு வீழ்ச்சி: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வெள்ளிக்கிழமை வா்த்தக முடிவில் ரூ.3.22 லட்சம் கோடி குறைந்து, ரூ.449.68 லட்சம் கோடியாக இருந்தது.
அந்நிய நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.3,752.52 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.5,153.37 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தனா்.
வீழ்ச்சிப் பட்டியலில் 2,396 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை மொத்தம் வா்த்தகமான 4,374 பங்குகளில், 2,396 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும், 1,812 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. 166 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
சென்செக்ஸ் 1,097 புள்ளிகள் வீழ்ச்சி: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 1,097 புள்ளிகள் (1.37 சதவீதம்) இழப்புடன் 78,918.90-இல் நிலைபெற்றது.
எடா்னல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, அல்ட்ராடெக் சிமெண்ட், எல்&டி உள்பட மொத்தம் 24 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும்; பாரத் எலக்ட்ரானிக்ஸ், ரிலையன்ஸ், சன் பாா்மா உள்பட 6 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 315 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 315.45 புள்ளிகள் (1.27 சதவீதம்) சரிந்து 24,450.45-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 13 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 37 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.