முகப்பு
வணிகம்

6 மாதங்களில் அதிகரித்த கனிம உற்பத்தி

ஆறு மாதங்களில் இரும்புத் தாது, மாங்கனீசு தாது மற்றும் முதல் நிலை அலுமினியம் உள்ளிட்ட கனிமங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

Updated On : 19 நவம்பர், 2024 at 12:00 AM
பகிர்:

புது தில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இரும்புத் தாது, மாங்கனீசு தாது மற்றும் முதல் நிலை அலுமினியம் உள்ளிட்ட கனிமங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இது குறித்து சுரங்கத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் இரும்புத் தாது உற்பத்தி முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட 5.5 சதவீதம் உயா்ந்து 13.5 கோடி டன்னாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் முதல் அரையாண்டில் 12.8 கோடி டன் இரும்புத் தாது உற்பத்தி செய்யப்பட்டது.

2023 ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் 16 லட்சம் டன்னாக இருந்த மாங்கனீசு தாது உற்பத்தி நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 6.2 சதவீதம் அதிகரித்து 17 லட்சம் டன்னாக உள்ளது.

இரும்பு அல்லாத உலோகத் துறையில், முதல் நிலை அலுமினியம் உற்பத்தி நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 1.2 சதவீதம் அதிகரித்து 20.90 லட்சம் டன்னாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 20.66 லட்சம் டன்னாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலகட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தி 2.39 லட்சம் டன்னிலிருந்து 4.6 சதவீதம் அதிகரித்து 2.50 லட்சம் டன்னாக உள்ளது.

ஒட்டுமொத்த கனிம உற்பத்தியில் இரும்புத் தாது 70 சதவிகிதம் பங்கு வகித்தது. 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இரும்புத்தாது உற்பத்தி 27.4 கோடி டன்னாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இரும்பை அதிகம் உபயோகிக்கும் எரிசக்தி, உள்கட்டமைப்பு, கட்டுமானம், வாகனம், இயந்திர உற்பத்தித் துறைகளில் தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதைப் பிரதிபலிக்கும் வகையில் அதன் தாதுப் பொருள் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய அலுமினியம் உற்பத்தியாளரான இந்தியா, சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தியில் முதல் 10 இடங்களை வகிக்கும் நாடுகளில் ஒன்று. இரும்புத் தாது உற்பத்தியில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →