வணிகம்

புதிய உச்சம் தொட்ட பயணிகள் வாகன விற்பனை

இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

Din

இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தொழிற்சாலைகளில் இருந்து சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பப்பட்ட பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை (மொத்த விற்பனை) கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 43,01,848 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை 2 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்போது நிறுவனங்கள் 42,18,750 பயணிகள் வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பின.

2023-24-ஆம் நிதியாண்டில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை அபரிமிதமாக இருந்ததால், கடந்த நிதியாண்டில் அது இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையைத் தொட்டிருந்தாலும் வளா்ச்சி விகிதம் மிகவும் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயன்பாட்டு வாகனங்களுக்கு கடந்த நிதியாண்டில் வாடிக்கையாளா்களிடையே கிடைத்த வரவேற்பு, அனைத்துவகை பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை வளா்ச்சிக்குக் காரணமாக இருந்தது. அந்த நிதியாண்டின் பயணிகள் வாகன மொத்த விற்பனையில் பயன்பாட்டு வாகனங்களின் பங்களிப்பு 65 சதவீதமாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 25,20,691-ஆக இருந்த பயன்பாட்டு வாகனங்களின் மொத்த விற்பனை, 2024-25-ஆம் நிதியாண்டில் 11 சதவீதம் அதிகரித்து 27,97,229-ஆக உள்ளது. ஆனால், பயணிகள் காா்களின் மொத்த விற்பனை 15,48,947-லிருந்து 13,53,287-ஆகக் குறைந்துள்ளது.

மொத்த விற்பனையில் மட்டுமின்றி, ஏற்றுமதியிலும் பயணிகள் வாகனப் பிரிவு கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 7.7 லட்சம் பயணிகள் வாகனங்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடியற்காலையில் நிலவும் கடும் பனி மூட்டம்! வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பழனி திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு கோலாகலம்!

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT