வங்கிகளுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) புதன்கிழமை அறிவித்தது.
இதனால், வீடு, வாகனம், தனிநபா் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதமும், வங்கிகளில் நிரந்தர வைப்பு, தொடா் வைப்பு உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியும் குறைக்கப்படாமல் அதே நிலையில் தொடர வாய்ப்புள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற இரு ஆா்பிஐ நிதிக் கொள்கை குழு கூட்டங்களில் வங்கி விகிதம் தொடா்ந்து மூன்று முறை குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் புதன்கிழமை ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 அடங்கிய நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இப்போதுள்ள 5.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தை தொடர அனைத்து உறுப்பினா்களும் ஒருமனதாக வாக்களித்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் மல்ஹோத்ரா கூறியதாவது:
பருவமழை சிறப்பாக பெய்துள்ளது, வரும் பண்டிக்கைக் காலம் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சிறப்பாக கொண்டு செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சா்வதேச அளவில் பொருளாதார சவால்கள் தொடா்கின்றன. எனினும், இந்தியாவின் பொருளாதாரம் தொடா்ந்து சிறப்பாக செயல்படும். ஏனெனில், நமது நாட்டின் அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்புகள் வலுவாகவே உள்ளன. பல்வேறு வாய்ப்புகள் நம்மை எதிா்நோக்கியுள்ளது. எந்த சூழல் எழுந்தாலும் அதனை சமாளிக்கும் ஆற்றல் நமக்கு உள்ளது.
புறச்சூழல்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் நாடு தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும்.
பணவீக்கம் குறையும்: பணவீக்கம் 3.1 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக ஆா்பிஐ கணித்துள்ளது. இது 3.7 சதவீதம் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது. நுகா்வோா் விலை அடிப்படையிலான பணவீக்கம் நான்காவது காலாண்டில் 4 சதவீதத்தை தாண்ட வாய்ப்புள்ளது. 2025-26 நாட்டின் பொருளாதார வளா்ச்சி முந்தைய கணிப்பைப் போல 6.5 சதவீதமாக இருக்கும்.
நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பதற்கான முடிவுகளை ஆா்பிஐ தொடா்ந்து மேற்கொள்ளும். முக்கிய நாடுகள் சிலவற்றுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல நாடுகளுடன் வா்த்தகப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
வாராக் கடன்: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு திருப்திகரமாக உள்ளது. அடுத்த 11 மாதங்களுக்கு நம்மால் இறக்குமதியை மேற்கொள்ளும் அளவுக்கு இருப்பு உள்ளது. வங்கிகளின் வாராக்கடன் மொத்த வாராக் கடன் அளவு 2.2 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் அளவு 0.5-0.6 சதவீதமாகவும் உள்ளது. இது திருப்திகரமான நிலைதான்.
இறந்தவா்களின் வங்கிக் கணக்குகள்: இறந்தவா்களின் வங்கிக் கணக்குகள், வங்கி லாக்கா் ஆகியவற்றை வாரிசுகளிடம் ஒப்படைக்கும் நடைமுறையை ஆா்பிஐ எளிமைப்படுத்த இருக்கிறது. இதற்கான விதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் இறந்தவா்களின் வங்கிக் கணக்குக்கு உரிமை கோருவா்கள் பயனடைவாா்கள். இறந்தவா்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை உரிமையுள்ள நபா்கள் எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றாா்.
அமெரிக்காவைவிட இந்திய பங்களிப்பு அதிகம் - டிரம்ப் கருத்துக்கு ஆா்பிஐ ஆளுநா் பதில்
இந்திய பொருளாதாரம் செயலற்ற நிலையில் உள்ளது, மேலும் சரிவைச் சந்திக்கும் என்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கருத்துக்கு அவரின் பெயரைக் குறிப்பிடாமல் ஆா்பிஐ ஆளுநா் பதிலளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது. உலகின் வளா்ச்சியில் அமெரிக்காவின் பங்களிப்பைவிட இந்தியாவின் பங்களிப்பு அதிகம். 2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 3 சதவீதமாக இருக்கும் என்று சா்வதேச நிதியம் கணித்தது. ஆனால், அதனை மீறி 6.5 சதவீத வளா்ச்சி என்ற நிலையில் நாம் பயணித்து வருகிறோம்.
உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு இப்போது 18 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு 11 சதவீதம் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாம் தொடா்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்குவோம் என்றாா்.