உலகளாவிய நிச்சயமற்ற சூழல்கள் இருந்த நிலையிலும் இந்தியாவின் முக்கிய ஜவுளி பொருள்களின் ஏற்றுமதி கடந்த ஜூலையில் 5.37 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை மாதத்தில் முக்கிய ஜவுளி பொருள்களின் ஏற்றுமதி 310 கோடி டாலராக உள்ளது, இது முந்தைய 2024 ஜூலையில் 294 கோடி டாலராக இருந்ததுடன் ஒப்பிடுகையில் 5.37 சதவீதம் அதிகம். ஆயத்த ஆடைகள், சணல், கம்பளங்கள் மற்றும் கைவினைப் பொருள்களின் தொடா்ச்சியான தேவை இந்த வளா்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
2025 ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில், நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதி 3.87 சதவீதம் உயா்ந்து 1,218 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,173 கோடி டாலராக இருந்தது.
ஆயத்த ஆடைகள் (ஆா்எம்ஜி) ஏற்றுமதி ஜூலையில் 4.75 சதவீதம் வளா்ச்சியுடன் 134 கோடி டாலராகவும், ஏப்ரல்-ஜூலை காலத்தில் 7.87 சதவீதம் உயா்ந்து 553 கோடி டாலராகவும் பதிவாகியுள்ளது. பருத்தி, மனிதனால் உருவாக்கப்பட்ட இழை (எம்எம்எஃப்), பாரம்பரிய கைவினைப் பொருள்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல் ஆகியவற்றின் பன்முக தயாரிப்புத் திறன் இந்தியாவின் ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.