நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தென் தமிழகம் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
நிகழ் நிதியாண்டில் (2025-26) ஜூலை மாதம் வரை, துறைமுகம் 1,33,520 டன் சமையல் எரிவாயுவைக் கையாண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் (2024-25) கையாளப்பட்ட 95,364 டன்னுடன் ஒப்பிடுகையில் 40.01 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 5 ஆண்டுகளில் சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் துறைமுகம் வலுவான முன்னேற்றத்தையும், ஆண்டுதோறும் நிலையான வளர்ச்சியையும் அடைந்துள்ளது.
2020-21-ஆம் நிதியாண்டில் துறைமுகம் 0.58 லட்சம் டன்னைக் கையாண்ட நிலையில், அது 2021-22-இல் 0.70 லட்சம் டன்னாக அதிகரித்தது. பின்னர், 2022-23-இல் 0.94 லட்சம் டன்னாகவும், 2023-24- இல் 2.98 லட்சம் டன்னாகவும் அதிகரித்து, 2024-25-இல் அதிகபட்சமாக 4.02 லட்சம் டன்னைக் கையாண்டு சீரான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
எண்ணெய் தளம்: அனைத்து சமையல் எரிவாயு செயல்பாடுகளும் துறைமுகத்தின் எண்ணெய் தளம் மூலமாகவே நடைபெறுகின்றன. 150 மீ. தள நீளம் கொண்ட துறைமுகத்தின் எண்ணெய் தளம் 13 மீ. மிதவை ஆழமும், 150 முதல் 230 மீ. நீளமும் கொண்ட கப்பல்களைக் கையாளுவதற்கு வசதியாக உள்ளது.
தற்போது எண்ணெய் தளத்தில் அதிகபட்சம் 40,000 டி.டபிள்யூ.டி. கொண்ட கப்பல்களைக் கையாள முடியும். எண்ணெய் தளத்தின் திறனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு துறைமுகம், புதிய கட்டமைப்புக்களை அமைக்கும் பணிகளைச் செய்து வருகிறது. இதன்மூலம், அதிகபட்சம் 55,000 டி.டபிள்யூ.டி. கொண்ட கப்பல்களைக் கையாள முடியும்.
திரவ சரக்குகள்: சமையல் எரிவாயுவின் வளர்ச்சியோடு, துறைமுகம் மொத்த திரவ சரக்குகளைக் கையாள்வதிலும் நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2022-23-ஆம் நிதியாண்டில் 15.24 லட்சம் டன்னாக இருந்த திரவ சரக்குகளின் அளவு 2023-24-ஆம் நிதியாண்டில் 16.29 லட்சம் டன்னாக உயர்ந்து, 2024-25-ஆம் நிதியாண்டில் 18.79 லட்சம் டன்னாக அதிகரித்தது. இது,
திரவ சரக்குகள் பிரிவில் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.