மும்பை: இன்றைய பங்குச் சந்தையில் எதிர்மறையான தொடக்கம் இருந்தபோதிலும், சந்தை பெரும்பாலான நேரங்களில் நேர்மறையான வர்த்தகத்திலும் வர்த்தகமானது. இறுதி நேர விற்பனை அழுத்தத்தின் மத்தியில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிவடைந்தன.
சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்த நிலையில், நிஃப்டி 24,426.85 புள்ளிகளாக நிறைவு. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 270.92 புள்ளிகள் சரிந்து 79,809.65 புள்ளிகளாகவும், நிஃப்டி 74.05 புள்ளிகள் சரிந்து 24,426.85 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.
பிஎஸ்இ-யில் மிட்கேப் குறியீடு 0.4 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.3 சதவிகிதமும் சரிந்து முடிந்தன.
இந்த வாரத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1.8 சதவிகிதம் வரை சரிந்தன. ஆகஸ்ட் மாதத்தில் தலா இரண்டு குறியீடுகளும் 1.5 சதவிகிதம் வரை சரிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 3,084 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,319 பங்குகள் உயர்ந்தும் 1,668 பங்குகள் சரிந்தும் 97 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.
நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஐடிசி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், டிரென்ட், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை உயர்ந்து முடிந்த நிலையில் எம் அண்ட் எம், இன்ஃபோசிஸ், அப்பல்லோ மருத்துவமனைகள், அதானி எண்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
துறை ரீதியாக உலோகம், ஐடி, ரியல் எஸ்டேட், ஆட்டோ 0.5 முதல் 1% வரை சரிந்தன. அதே நேரத்தில் மூலதன பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள், ஊடகம், எஃப்எம்சிஜி குறியீடு ஆகியவை 0.2 முதல் 1% வரை உயர்ந்தன.
எழுதுபொருள் பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகித மறுசீரமைப்பு பற்றிய பேச்சின் காரணமாக நவநீத எஜுகேஷன் பங்குகள் கிட்டத்தட்ட 2% உயர்ந்தன. குஜராத்தில் ஓஎஸ்ஏடி (OSAT) வசதிகளை அறிமுகப்படுத்தியதால் சிஜி பவர் பங்குகள் கிட்டத்தட்ட 5% அதிகரித்தன.
செப்டம்பர் 2 அன்று நிதி திரட்டும் திட்டத்தை வாரியம் பரிசீலிக்கவிருந்ததால் ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் பங்கு விலை 3% அதிகரித்தது. பத்திர ஒதுக்கீடு மூலம் 300 மில்லியன் டாலர் திரட்டியதால் சம்மன் கேபிடல் பங்குகள் 5% க்கும் அதிகமாக உயர்ந்தன.
பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் நிறுவனம் ரூ.9.5 கோடி மதிப்புள்ள பேக்கிங் ஒர்க் ஆர்டரை பெற்றதையடுத்து அதன் பங்குகள் 2% அதிகரித்தது. ரூ.80 கோடி வரை நிதி திரட்டுவதற்கான ஒப்புதலை வாரியம் வழங்கிய நிலையில் டிரக்ஸ் நிறுவன பங்குகள் 5% சரிந்தன. எஸ்எம்பிசி ரூ.16,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக வெளியான தகவலால் யெஸ் வங்கி பங்குகளின் விலை 2% உயர்ந்தன.
கிரெடிட் அக்சஸ் கிராமீன், எச்பிஎல் இன்ஜினியரிங், டால்மியா பாரத், ப்ராக்டர் அண்ட் கேம்பிள் ஹெல்த் உள்ளிட்ட 100 பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை எட்டியது.
இதையும் படிக்க: யூகோ வங்கி நிகர லாபம் 10% அதிகரிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.