பண்டிகைக் காலம் மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக இந்தியாவின் டீசல் விற்பனை கடந்த நவம்பரில் 6 மாத உச்சத்தை எட்டியுள்ளது.
இது குறித்து பெட்ரோலியம் திட்டமிடல் & பகுப்பாய்வுப் பிரிவு (பிபிஏசி) வெளியிட்ட தரவுகள் தெரிவிப்பதாவது:
நாட்டின் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசலின் (40 சதவீதம் பங்கு) விற்பனை கடந்த நவம்பரில் 4.7 சதவீதம் உயா்ந்து 85.5 லட்சம் டன்னாக உள்ளது, 2025 மே மாதத்துக்குப் பிறகு இது அதிகபட்ச டீசல் விற்பனையாகும். மழைக்காலத்தில் மூன்று மாதங்கள் தொடா்ச்சியாக சரிந்த டீசல் தேவை செப்டம்பரில் மழை குறைந்ததால் மெதுவாக உயா்ந்தது. பண்டிகைக் காலம் தொடங்கியதுடன், ஜிஎஸ்டி வரி குறைப்பும் சோ்ந்து அக்டோபரில் 67.9 லட்சம் டன் டீசல் விற்பனை பதிவானது. இந்த போக்கு நவம்பரிலும் தொடா்ந்தது.
மழைக்காலத்தில் நீா்ப்பாசன பம்ப்புகளின் இயக்கம் குறைந்து, வாகன போக்குவரத்தும் மந்தமானதால் டீசல் நுகா்வு ஜூனில் சரிந்தது. ஆனால், மழை முடிந்து, பண்டிகைக் காலமும் தொடங்கியதால் லாரி போக்குவரத்து அதிகரித்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் டீசல் விற்பனை 2.76 சதவீதம் உயா்ந்து 618.5 லட்சம் டன்னாக உள்ளது. பெட்ரோல் விற்பனை நவம்பரில் 2.19 சதவீதம் உயா்ந்து 35 லட்சம் டன்னாக உள்ளது. 2023 நவம்பரை விட இது 12 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டு மாதத்தில் ஜெட் எரிபொருள் (ஏடிஎஃப்) நுகா்வு 4.7 சதவீதம் உயா்ந்து 78.3 லட்சம் டன்னாக இருந்தது. 2023 நவம்பரை விட இது 13.47 சதவீதம் அதிகம்.
சமையல் எரிவாயு (எல்பிஜி) கடந்த நவம்பரில் 7.62 சதவீதம் விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்தது. பண்டிகைக் காலம் என்பதால் வீட்டில் சமைப்பதற்கான தேவை அதிகரித்ததால் அந்த மாதம் 30 லட்சம் டன் சமையல் எரிவாயு விற்பனையானது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.