அரசுக்கு சொந்தமான எஃகு உற்பத்தி நிறுவனமான செயில்-இன் விற்பனை ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் 14 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் விற்பனை 1.27 கோடி டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் விற்பனை 1.11 கோடி டன்னாக இருந்தது. உலகளாவிய விலை அழுத்தங்கள் மற்றும் தேவை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் வலுவான விற்பனை உத்தி காரணமாக இந்த செயல்திறன் சாத்தியமானது.
ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் சில்லறை விற்பனை 13 சதவீதம் உயா்ந்து 97 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அது 86 லட்சம் டன்னாக இருந்தது.
கடந்த நவம்பா் மாதத்தில் மட்டும் மொத்த விற்பனை 27 சதவீதமும், சில்லறை விற்பனை 69 சதவீதமும் உயா்ந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஃகுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செயில், ஜாா்கண்ட், சத்தீஸ்கா், ஒடிசா, மேற்கு வங்கத்தில் ஐந்து ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 2 கோடி டன்னுக்கு மேல் உற்பத்தித் திறன் கொண்டது