தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தொட்டுவிடும் என்று இத்தனை நாள்களாக அச்சுறுத்தி வந்த நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி அது நடந்தே விட்டது.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அதாவது டிசம்பர் 15ஆம் தேதி காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.12,460க்கும், சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ.99,680க்கும் விற்பனையானது.
ஒரு லட்சத்தைத் தொட்டுவிட சில நூறுகளே இருந்த நிலையில், பிற்பகலிலேயே அந்த மாற்றமும் வந்துவிட்டது. திங்கள்கிழமை மாலை வேளையில் மீண்டும் தங்கம் விலை உயர்வைக் கண்டது.
அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.55 உயர்ந்து ரூ.12,515-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 12 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு சில ஆயிரங்கள் அல்ல ரூ.42,920 வரை உயர்ந்து, ஏழைகளுக்கு மட்டுமல்ல, லட்சாதிபதிகள், கோடீஸ்வரர்களைத் தவிர யாருக்குமே எட்டாக்கனியாக மாறிவிட்டது.
அதற்காக இனி தங்கம் வாங்கவே வேண்டாம், வாங்கவே முடியாது என்று விட்டுவிட முடியுமா? மாற்றத்தைப் பற்றி யோசிக்கும்போது பல மாற்றங்கள் ஏற்கனவே வந்துவிட்டதை அறிய முடிகிறது.
சர்வதேச நிலையற்ற தன்மை, பல உலக நாட்டு வங்கிகள் தங்கத்தை வாங்கி சேமிப்பது, பங்குச் சந்தைகளில் சரிவுகள் ஏற்படுவதால் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை முதலீட்டாளர்கள் தேர்வு செய்வது போன்றவை தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகியிருக்கிறது.
இதனால், ஒரு சவரன் தங்கத்தை ஒரு லட்சத்துக்கு மேல் கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையாளர்களின் தேர்வாக இருப்பது 18 மற்றும் 14 காரட் தங்க நகைகள்தான். ஏற்கனவே சிறு நகைக் கடைகளில் அத்தனை தூய்மையான தங்கம் இல்லாமல் அதிகம் செம்பு சேர்த்த தங்க நகைகளை 22 காரட் தங்கம் விலைக்கு வாங்கி ஏமாந்த வாடிக்கையாளர்கள், தற்போது 18 காரட் மற்றும் 14 காரட் என்ற முத்திரைகளோடு வரும் அழகிய தங்க நகைகளை அதற்கேற்ற விலையில் வாங்கும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தங்க நகைக் கடைகளில் 22 காரட் தங்க நகைகள் விற்பனை கிட்டத்தட்ட 50 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும், அதற்கு மாறாக 18 மற்றும் 14 காரட் தங்கம் விற்பனை சூடுபிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்பெல்லாம் திருமணத்துக்கு நகை வாங்குவதாக இருந்தால் பெரும்பாலும் 22 காரட் தங்க நகைகளைத்தான் தேர்வு செய்வார்கள். ஆனால், இப்போது திருமணத்துக்கும் 18 மற்றும் 14 காரட் நகைகளை வாங்கும் போக்கு அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை, திருமண காலங்களில் விற்பனையாகும் நகைகளில் 75 சதவீதம் 22 காரட் நகைகளாகவே இருக்கும். ஆனால், அது அண்மைக் காலமாக 50 சதவீதமாக மாறியிருக்கிறது. சாதாரண மக்களின் தேர்வாக தற்போது 18 மற்றும் 14 காரட் நகைகள் மாறிவருகின்றனவாம்.
இதேநிலைதான், தங்க நகை உற்பத்தியாளர்களிடையே மாறியிருக்கிறதாம். 18, 14 காரட் நகைகள் அதிக டிசைன்களில் கிடைப்பதால், இளம் தலைமுறை அதனை அதிகம் வாங்குவதால், தற்போது இந்த வகை நகைகள் அதிகம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எப்போதுமே 22 காரட் தங்க நகைக்கு இருக்கும் மவுசு குறையப்போவதில்லை என்றும் வியாபாரிகள் கூறுகிறார்கள்.
டிசம்பர் 16ஆம் தேதி நிலவரப்படி,
சென்னையில் 24 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.13,473க்கும் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,350க்கும், 18 காரட் தங்கம் ரூ.10,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க.. தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.