இந்திய நிறுவனங்கள் 2025-ஆம் ஆண்டில் தொடக்க பொதுப் பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) மூலம் ரூ.1.95 லட்சம் கோடி திரட்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
இது குறித்து மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்ஷியல் சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2025-ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் 365-க்கும் மேற்பட்ட ஐபிஓக்கள் மூலம் ரூ.1.95 லட்சம் கோடி திரட்டியுள்ளன. இது முந்தைய ஆண்டுகளின் சாதனையை முறியடித்துள்ளது.
அந்த ஆண்டில் மிகப் பெரிய நிறுவனங்களின் ஐபிஓ-க்கள் மொத்த மூலதன திரட்டலில் 94 சதவீதம் பங்களித்துள்ளன. 106 பெரிய நிறுவனங்களின் ஐபிஓக்கள் ரூ.1.83 லட்சம் கோடி திரட்டின. எஞ்சிய 259 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஐபிஓக்-கள் இதில் சிறிய பங்கு வகித்தன.
நடப்பு 2025-ஆம் ஆண்டில் டாடா கேப்பிட்டல் நிறுவனம் அக்டோபரில் ஐபிஓ மூலம் ரூ.15,512 கோடி திரட்டியது. இது இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் நான்காவது பெரிய ஐபிஓ ஆகும்.
டாடா கேப்பிட்டலுக்கு அடுத்தபடியாக ஹெச்டிபி ஃபைனான்ஷியல் சா்வீசஸ் ஐபிஓ மூலம் ரூ.12,500 கோடி திரட்டியது. அதே போல் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் ரூ.11,607 கோடியும் க்ரோவ் ரூ.6,632 கோடியும் திரட்டின. இணையவழி வா்த்தக நிறுவனமான மீஷோ ஐபிஓ மூலம் ரூ.5,421 கோடியைத் திரட்டியது.
துறை ரீதியில், வங்கியல்லா நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) ஐபிஓ மூலம் மூலதனம் திரட்டியதில் 26.6 சதவீத பங்குடன் முதலிடம் வகித்தன. அதைத் தொடா்ந்து மூலதனப் பொருள்கள், தொழில்நுட்பம், சுகாதாரம், நீடித்துழைக்கும் நுகா்பொருள் துறை நிறுவனங்கள் உள்ளன.
முந்தைய 2024-ஆம் ஆண்டு ஐபிஓ மூலம் மூலதனம் திரட்டியதில் வாகனம், தகவல் தொடா்பு, சில்லறை விற்பனை ஆகிய துறைகளைச் சோ்ந்த நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின.
நடப்பு 2025-ஆம் ஆண்டில் ஐபிஓக்கள் சராசரியாக 26.6 மடங்கு மிகை சந்தா பெற்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.