டி20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இலங்கை அணியினர். படம்: ஐசிசி
கிரிக்கெட்

2-வது உலகக் கோப்பையை தவறவிட்ட இந்தியா.. முதல்முறை சாம்பியனான இலங்கை! 2014 ரீவைண்ட்!!

முதல்முறையாக இலங்கை அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியதை பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மிர்பூர், ஏப். 6: 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற நான்காவது ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணி முதல்முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

2007 ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையையும் 2011 ஆம் ஆண்டில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையும் இந்தியாவிடம் இழந்த இலங்கை அணிக்கு 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பை பலனளித்தது.

2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் முதல் முறையாக வங்கதேசத்தில் நடைபெற்றது. குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங், குரூப்- பி பிரிவில் நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் இடம்பெற்றிருந்தன. இதில் முதலிடம் பிடிக்கும் அணிகள் குரூப்-1, 2 வில் இடம் பெற்றன. அதன்படி, குரூப் 1-ல் நெதர்லாந்து அணியும், குரூப்-2-ல் வங்கதேச அணியும் இடம்பெற்றன.

குரூப்-1 மற்றும் 2-ல் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்ற அணிகளுடன் அரையிறுதியில் மோதின. அதன்படி, முதல் அரையிறுதியில் இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும், இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதின. இதில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இவ்விரு அணிகளும் மோதிய இறுதிப்போட்டி 2014 ஆம் ஆண்டு ஏப்.6 ஆம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.

நான்காவது டி20 உலகக் கோப்பைத் தொடரில் முன்னதாக போட்டியை நடத்திய நாடு, அடுத்த உலகக் கோப்பை வெல்லும் என பலரும் மூடநம்பிக்கையைப் பின்பற்றி வந்தனர்.

அதன்படி, 2009 ஆம் ஆண்டில் டி20 போட்டியை நடத்தியது இங்கிலாந்து. ஆனால், கோப்பையை வென்றது பாகிஸ்தான். அதேபோல, 2012 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தியது இந்தியா. அதேபோல, இந்திய அணியும் இறுதிப்போட்டியில் வெல்லும் என பலரும் நினைத்திருந்தனர்.

கேப்டன் பதவியில் மலிங்காவுக்கு போதிய அனுபவம் இல்லாதபோதும், அவருக்கு பதிலாக மூத்த வீரரான ஜெயவர்த்தனேவும், சங்ககாராவும் அவ்வப்போது வழிநடத்தவும் செய்தனர். அதன்காரணமாக, ரணதுங்காவுக்குப் பிறகு இலங்கைக்கு உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன் என்ற பெருமையையும் மலிங்கா பெற்றார்.

இந்த ஆட்டத்தில் இலங்கை டாஸ் வென்றது. இந்திய அணியின் பேட்டிங், எத்தனை ரன்கள் எடுத்தாலும் அதனை விரட்டிப் பிடிக்கும் தன்மை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்ட இலங்கை, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய அணியையே இந்த முறையும் களமிறக்கினார் தோனி. ஆனால், இலங்கை அணியில் பிரசன்னாவுக்குப் பதிலாக திசாரே பெரேரா களமிறக்கப்பட்டார்.

இந்தத் தொடரில் இறுதிச்சுற்று வரை சிறப்பாக ஆடி வந்த இந்திய அணிக்கு இறுதிப் போட்டி சொதப்பலாக அமைந்தது. இளம் வீரரான ரஹானே 8 பந்துகளில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, தொடக்கம் முதலே நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்தது. கடைசிப் பந்தில் 2-வது ரன் எடுக்கும்போது கோலி 77 ரன்களில் ரன் அவுட்டானார்.

இந்தியா நிர்ணயித்த எளிய இலக்கை இலங்கை வீரர்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி சேஸ் செய்யத் தொடங்கினர். அவ்வப்போது விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், பின்கள வீரர்கள் அதனைப் பொருள்படுத்தாது விளையாடி அணியை 17.5 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தனர்.

இடது கை ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் சங்ககரா 52 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆட்டநாயகன் விருதையும் அவரே பெற்றார். இந்தத் தொடரில் அதிக ரன்களைக் குவித்த விராட் கோலி, தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

1996 ஆம் ஆண்டில் ஐசிசி உலகக் கோப்பையை வென்ற போது இலங்கையின் தெருக்களில் வழிந்தோடிய மகிழ்ச்சியை, லசித் மலிங்கா தலைமையிலான அணியினர் மீண்டும் ஏற்படுத்தினர். “எங்களது அணியின் மூத்த வீரர்களான சங்ககாராவுக்கும், ஜெயவர்த்தனேவுக்கும் உலகக் கோப்பையை பரிசளிக்க வேண்டும்” என்று ஆட்டத்துக்கு முன் கருத்து தெரிவித்திருந்த மலிங்கா, அதனை நிறைவேற்றவும் செய்தார்.

200

இந்தத் தொடரில் எந்த அணியினரும் ஒருமுறைகூட 200 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. இதேபோல், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையிலும் 200 ரன்களை எந்த அணியும் எட்டவில்லை. ஆனால், 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையில் 5 முறை 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டது.

1000

தனது கடைசி டி20 போட்டியில் விளையாடிய மஹேல ஜெயவர்த்தனே, இதுவரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். அவர் டி20 உலகக் கோப்பைகளில் இதுவரை 1016 ரன்கள் குவித்துள்ளார்.

அதிகபட்ச ஸ்கோர் - தென் ஆப்பிரிக்கா: 196/5

குறைந்தபட்ச ஸ்கோர் - நெதர்லாந்து: 39

தனிபட்ட நபரின் அதிகபட்சம் - ஹேல்ஸ் (இங்கிலாந்து): 116

தொடரில் அதிக ரன் - விராட் கோலி: 319

பலரை ஆட்டமிழக்கச் செய்த கீப்பர்:

டி காக் (தென் ஆப்பிரிக்கா): 8

அதிக கேட்சுகள்

ரெய்னா (இந்தியா): 3

பிராவோ (மே.தீவுகள்): 3

மில்லர் (தென் ஆப்பிரிக்கா): 3

சிறந்த பந்து வீச்சு

ஹெராத் (இலங்கை): 5 விக்கெட்டுகள்/ 3 ரன்கள்

அதிக விக்கெட்டுகள்

இம்ரான் தாஹீர் (தென் ஆப்பிரிக்கா): 12

குறைந்தபட்சம்: இந்த ஆட்டத்தில் இந்திய அணி எடுத்த 130 ரன்களே, டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிச் சுற்றில் ஓர் அணி எடுத்த மிகக் குறைவான ரன்களாகும். இறுதிச்சுற்றில் அதிகபட்ச ரன்களை எடுத்ததும் இந்திய அணிதான். 2007 ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற போது 157 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது.

(தினமணி கருவூலத்தின் உதவியுடன்...)

Indian cricket fans do not have happy memories of April 6 as 6 years ago they saw their team lose the T20 World Cup final against Sri Lanka in a match which was more heartbreaking than disappointing for them.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலாடை இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு!

ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 டீசர்!

அமைச்சர் நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்- அண்ணாமலை

வடக்கு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

நியூசிலாந்து அணிக்கு உஸ்மான் தாரிக் அச்சுறுத்தலா? மார்க் சாப்மேன் பதில்!

SCROLL FOR NEXT