FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

4 போட்டிகளில் வெறும் 30 ரன்கள் மட்டுமே... உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா இடம்பெறுவாரா?

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறுவாரா என்பது குறித்து...

57 வினாடிகள் முன்பு
ரோஹித் சர்மா - படம் | பிசிசிஐ
பகிர்:

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisement

Advertisement

டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இந்தத் தொடரில் இடம்பெற்று விளையாடினார். ஆனால், அவருக்கு இந்தத் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. 4 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் 0 ரன், 23 ரன்கள், 0 ரன், 7 ரன்கள் முறையே எடுத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள நிலையில், உலகக் கோப்பைத் தொடருக்குத் தயாராவதற்கான ஒரு பகுதியாகவே நியூசிலாந்துக்கு எதிரான தொடர் பார்க்கப்பட்டது. இந்தத் தொடரில் மிகவும் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ரோஹித் சர்மா, உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய அணி இரண்டு ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. சொந்த மண்ணில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள அந்த ஒருநாள் தொடர்களில் ரோஹித் சர்மா ரன்கள் குவிக்கக் கூடும். ஆனால், உலகக் கோப்பைத் தொடர் வெளிநாடுகளில் நடப்பதால் அவரது ஃபார்ம் வெளிநாடுகளில் எப்படி இருக்கிறது என்பதே கவனிக்கப்படும்.

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியைத் தழுவிய பிறகு, இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் குறித்து தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், இதே போன்ற சூழலில்தான் இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அணிக்காக உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் ரோஹித் சர்மாவுக்கு இருந்தாலும், அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பதே முக்கியம். இந்திய அணிக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி பல்வேறு சாதனைகள் படைத்துள்ள வீரர் ஒருவருக்கு சிறப்பான பிரியாவிடை அவசியம் என்றாலும், சிறப்பான ஃபார்முடன் வாய்ப்புக்காக வெளியே காத்திருக்கும் வீரர்கள் குறித்தும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய அணி, ஜிம்பாப்வேவுக்கு எதிராக மும்பை வான்கடே திடலில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது. அந்தப் போட்டி ரோஹித் சர்மாவின் கடைசிப் போட்டியாக இருக்குமா? அல்லது அவர் உலகக் கோப்பையில் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

summary

Regarding whether Rohit Sharma will be part of the Indian squad for the ODI World Cup to be held next year...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.