என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் ஒருபோதும் இப்படியொரு அனுபவம் இருந்ததில்லை: ரோஹித் சர்மா
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் ஏற்பட்ட மிகவும் கடினமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் ஏற்பட்ட மிகவும் கடினமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய அணி கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் அசைக்க முடியாத அணியாக தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததால் சாம்பியன் பட்டம் வெல்லும் இந்திய அணியின் கனவு தகர்ந்தது.
ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லத் தவறினாலும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதன் மூலம், இந்திய அணியின் 11 ஆண்டுகள் கோப்பைக்கானத் தேடல் முடிவுக்கு வந்தது. அதன் பின், அடுத்த ஆண்டே சாம்பியன் டிராபியை வென்று அசத்தியது இந்தியா. அதன் பின், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைப் போன்று அதற்கு முன்பாக தனது கிரிக்கெட் பயணத்தில் அது போன்ற மிகவும் கடினமான அனுபவம் இருந்ததில்லை என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லத் தவறியது என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் மிகவும் கடினமான தருணம். இந்திய அணிக்காக 19 ஆண்டுகளாக விளையாடியுள்ளேன். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்வியைப் போன்று ஒருபோதும் கடினமான அனுபவம் இருந்ததில்லை. கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கையில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். சிறப்பாக விளையாட வேண்டும் என்ற இலக்கை என்னால் அடையமுடியவில்லை. அது என்னுடைய தனிப்பட்ட இலக்கு.
ஆனால், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி ஒட்டுமொத்த தேசத்தின் கனவு நாங்கள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான். அதனால், அந்தத் தோல்வியை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நாங்கள் அந்தத் தொடரில் விளையாடிய விதத்தைப் பார்த்தால் கண்டிப்பாக கோப்பையை வென்றுவிடுவோம் என்று உறுதியாக நம்பினோம். நாங்கள் தோற்றுவிடுவோம் என ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால், அதுதான் விளையாட்டு. எல்லா விஷயங்களும் சரியாக செல்லும்போது ஏதேனும் ஒன்று தவறாக நடந்தால் உங்களை அது கீழே இறக்கிவிடும். விளையாட்டிலிருந்து இதனை நான் கற்றுக்கொண்டேன்.
தோல்வியிலிருந்து நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை வென்றாக வேண்டும் என இந்திய அணி விளையாடிய வேட்கை தெளிவாக தெரிந்திருக்கும். வெற்றியைக் காட்டிலும் தோல்விகள் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும். ஒவ்வொரு நவம்பர் 19 ஆம் தேதிக்கும், ஜூன் 29 ஆம் தேதி உள்ளது என்றார்.
Former Indian team captain Rohit Sharma has shared the most difficult experience of his cricketing journey.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.