முகப்பு
வணிகம்

8 நாள்களுக்குப் பிறகு உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (பிப். 17) இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் முடிந்தது.

Updated On : 17 பிப்ரவரி, 2025 at 1:10 PM
கோப்புப் படம்
பகிர்:

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (பிப். 17) இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் முடிந்தது.

தொடர்ந்து 8 நாள்களாக சரிவுடன் முடிந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் 57 புள்ளிகளும் நிஃப்டி 22,800 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்திருந்தன.

பார்மா, மெட்டல் மற்றும் நிதித் துறை பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்து 0.5 - 1% வரை ஏற்றம் கண்டன. ஆட்டோமொபைல், டெலிகாம், ஐடி துறை பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.65 புள்ளிகள் உயர்ந்து 75,996.86 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.076 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30.25 புள்ளிகள் உயர்ந்து 22,959.50 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.13 சதவீதம் உயர்வாகும்.

19 நிறுவனப் பங்குகள் உயர்வு

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 11 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

இதில் அதிகபட்சமாக பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் 2.91% வரை உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக இந்தஸ்இந்த் வங்கி 2.33%, பவர்கிரிட் 2.28%, அல்ட்ராடெக் சிமென்ட் 2.01%, அதானி போர்ட்ஸ் 1.91%, எச்.சி.எஃப்.சி. வங்கி 1.33%, சொமாட்டோ 1.18% உயர்ந்திருந்தன.

இதேபோன்று எம்&எம் -3.77%, பார்தி ஏர்டெல் -2.42%, டிசிஎஸ் -0.78%, இன்ஃபோசிஸ் -0.76%, ஐசிஐசிஐ வங்கி -0.72%, எல்&டி -0.49%, ஆக்சிஸ் வங்கி -0.46% சரிவுடன் காணப்பட்டன.

நிஃப்டி நிலவரம்

நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் காட்ஃபிரே பிலிப்ஸ், ஜிஎஸ்கே பார்மா, மனப்புரம் ஃபைனான்ஸ், பிராமல் பார்மா, என்.எல்.சி. இந்தியா, கேஸ்ட்ரால் இந்தியா, ஜூம்பியண்ட் லைஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

திரிவேணி டர்பைன்ஸ், பிடிசி இன்டஸ்ட்ரீஸ், டென்லா பிளார்ட்பார்ம், பாலிசி பஜார் உள்ளிட்டவை சரிவில் இருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி ரூ. 4,294.69 கோடி மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.

2025ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 1 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றப்பட்டுள்ளன. பிப்ரவரியில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூ. 21,272 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன.

இதையும் படிக்க | 2025-ல் இதுவரை ரூ. 1 லட்சம் கோடி வெளிநாட்டு நிதி வெளியேற்றம்!

முழு கட்டுரையைப் படிக்க →