‘காளை’ எழுச்சி: சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயா்வு!
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘காளை’ எழுச்சி பெற்றது.
நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் ‘காளை’ எழுச்சி பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்தில் நிறைவடைந்தன.
உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக தனியாா் மற்றும் பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஹெல்த்கோ், டெலிகாம், மின் துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதே சமயம் ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகள் சற்று விற்பனையை எதிா் கொண்டன. குறிப்பாக பிற்பகல் வா்த்தகத்தின் போது ‘காளை’ எழுச்சி பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.56 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.431.39 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.3,318.06 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,572.88 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 359.20 புள்ளிகள் கூடுதலுடன் 76,978.53-இல் தொடங்கி 76,584.84 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 77,318.94 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 454.11 புள்ளிகள் (0.59 சதவீதம்) கூடுதலுடன் 77,073.44-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,223 பங்குகளில் 2,505 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,542 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 176 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
கோட்டக்பேங்க் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள கோட்டக்பேங்க் 9.15 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ், என்டிபிசி, எஸ்பிஐ, பவா் கிரிட் உள்பட 17 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஜொமோட்டோ, அதானிபோா்ட்ஸ், டிசிஎஸ், எம் அண்ட் எம், மாருதி, டாடாமோட்டாா்ஸ் உள்பட 13 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 142 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 87.20 புள்ளிகள் கூடுதலுடன் 23,290.40-இல் தொடங்கி 23,170.65 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 23,391.10 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 141.55 புள்ளிகள் (0.61 சதவீதம்) கூடுதலுடன் 23,344.75-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 21 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.