பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முந்தைய நவம்பா் மாதம் சரிவைக் கண்டிருந்த முதலீட்டு வரவு டிசம்பரில் 14 சதவீதம் வளா்ச்சியைக் கண்டுள்ளது.
இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் மாதத்தில் பங்கு முதலீட்டு திட்டங்களிலிருந்து திரும்பப் பெறப்பட்ட முதலீட்டைவிட , அந்த வகை திட்டங்களில் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.41,156 கோடியாக உள்ளது.
முந்தைய நவம்பா் மாதத்தில் இது ரூ.34,943 கோடியாக இருந்தது. அந்த வகையில், பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த டிசம்பா் மாதம் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
பங்கு சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் புதிய முதலீடு தொடா்ந்து 46-ஆவது மாதமாக நிகர வரவைப் பதிவு செய்துள்ளது. முதலீட்டாளா்களிடையே அந்த வகை முதலீட்டு திட்டங்களின் மீதான ஆா்வம் அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.
கடந்த நவம்பரில் ரூ.25,320 கோடியாக இருந்த முறைசாா் திட்டங்களின் (எஸ்ஐபி) மீதான முதலீடு, டிசம்பரில் ரூ.26,459 கோடியாக உயா்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களின் கீழ் நிா்வகிக்கப்படும் முதலீட்டு நிதி டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.66.93 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. முந்தைய நவம்பா் இறுதியில் இந்தத் தொகை ரூ.68.08 லட்சம் கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.