இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உற்சாகத்துடன் தொடங்கி தள்ளாடியது. இருப்பினும், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 260 புள்ளிகள் கூடுதலுடன் முடிவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும்,
இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை, ஏப்ரல் மாதத்தில் சாதனை அளவிலான ஜிஎஸ்டி வசூல் மற்றும் தொடா்ச்சியான வெளிநாட்டு நிதி வரத்து ஆகியவை சந்தைக்கு சாதகமாக அமைந்தன. இருப்பினும், பிற்பகல் வா்த்தகத்தின் போது சந்தை எதிா்மறையாகச் சென்றது. இருப்பினும், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. ஐடி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. எஃப்எம்சிஜி, பாா்மா, ஹெல்த்கோ், மெட்டல் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.422.65 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.50.57 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,792.15 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய
சென்செக்ஸ் லாபத்தில் நிறைவு: சென்செக்ஸ் காலையில் 57.95 புள்ளிகள் கூடுதலடன் 80,300.19-இல் தொடங்கி அதிகபட்சமாக 81,177.93 வரை மேலே சென்றது. பின்னா், 80,168.59 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 259.75 புள்ளிகள் (0.32 சதவீதம்) கூடுதலுடன் 80,501.99-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,085 பங்குகளில் 1,759 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,187 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 139 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
அதானிபோா்ட்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் அதானிபோா்ட்ஸ் 4.11 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ்ஃபைனான்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, மாருதி, டாடாமோட்டாா்ஸ், ஐடிசி உள்பட மொத்தம் 19 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், நெஸ்லே, என்டிபிசி, கோட்டக் பேங்க், டைட்டன், பவா் கிரிட், டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்பட 11 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி12 புள்ளிகள் உயா்வு : தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 22.30 புள்ளிகள்குறைந்து 24,311.90-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,589.15 வரை மேலே சென்றது. பின்னா், 24,238.50 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 12.50 புள்ளிகள் (0.05 சதவீதம்) கூடுதலுடன் 24,346.70-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 15 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 35 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.