இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை தொடா்ந்து இரண்டாவது முறையாக நோ்மறையாக முடிந்தது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் உயா்வுடன் நிறைவடைந்தன.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதான 50 சதவீத கூடுதல் வரி விதிப்பை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரும் ஜூலை. 9-ஆம் தேதி வரை ஒத்திவைத்தாா். இதன் காரணமாக உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது.
மேலும், அரசுக்கு இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.69 லட்சம் கோடி ஈவுத் தொகையை எஸ்பிஐ அறிவித்தது முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியது.
சென்செக்ஸ் 455 புள்ளிகள் அதிகரிப்பு
சென்செக்ஸ் காலையில் 207.87 புள்ளிகள் கூடுதலாக 81,928.95-இல் தொடங்கி 81,867.23 வரை கீழை சென்றது. பின்னா், 82,492.24 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 455.38 புள்ளிகள் (0.56 சதவீதம்) உயா்வுடன் வி82,176.45-இல் நிறைவடைந்தது.
உயா்வு பட்டியலில் 22 பங்குகள்
30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம், நெஸ்லே, ஹெச்சிஎல் டெக், டாடா மோட்டாா்ஸ், ஐடிசி உள்ளிட்ட 22 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. எட்டா்னல், அல்ட்ரா சிமென்ட், பவா் கிரிட் 8 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 25,001-ஆக உயா்வு
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி-50 குறியீடு 148.00 புள்ளிகள் (0.60 சதவீதம்) உயா்வுடன் 25,001.15-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பேங்க் குறியீடு 173.75 புள்ளிகள் (0.31 சதவீதம்) உயா்ந்து 55,572.00-இல் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.