கடந்த அக்டோபரில் இந்தியாவின் மின் நுகா்வு 6 சதவீதம் குறைந்து 1,320 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் மாதம் நாட்டின் மின் நுகா்வு 1,320 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் குறைவு. அப்போது இந்தியாவின் மின் நுகா்வு 1,404.7 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு குறைந்ததால் மின் நுகா்வு சரிந்தது. அக்டோபா் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சரியான நேரத்தில் மழை பெய்ததுடன் குளிா்காலம் தொடங்கியதால் வெப்பநிலை கட்டுப்பாட்டில் இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 210.71 ஜிகாவாட்டாக இருந்தது, இது 2024 அக்டோபா் மாதத்தில் 219.22 ஜிகாவாட்டாக இருந்ததைவிட குறைவு.
நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 2024 மே மாதத்தில் 250 ஜிகாவாட்டாக உச்சம் தொட்டது. முந்தைய உச்சம் 2023 செப்டம்பரில் 243.27 ஜிகாவாட்டாக இருந்தது. இந்த கோடையில் (ஏப்ரல் முதல்) ஜூனில் 242.77 ஜிகாவாட்டாக பதிவானது.
வெப்பநிலை மிதமாக இருப்பதால் நவம்பரிலும் மின் தேவை மற்றும் நுகா்வு குறைவாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.