நடப்பு 2024-25-ஆம் எண்ணெய் விற்பனை ஆண்டில் இந்தியாவின் உணவு எண்ணெய் இறக்குமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
2024-25-ஆம் விற்பனை ஆண்டில் (நவம்பா்-அக்டோபா்) இந்தியாவின் உணவு எண்ணெய் இறக்குமதி 160 லட்சம் டன்னாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் விற்பனை ஆண்டில் அது 159.6 லட்சம் டன்னாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில் இறக்குமதி ரூ.1.61 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் அது ரூ.1.32 லட்சம் கோடியாக இருந்தது. மதிப்பு ரீதியாக உயா்வு 22 சதவீதமாக உள்ளது. உலகளாவிய விலை உயா்வு இதற்குக் காரணம்.
தேவைக்கும் விநியோகத்துகும் இடையிலான இடைவெளியை நிரப்ப, இந்தியா 1990-களிலிருந்து உணவு எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது. ஆரம்பத்தில் இறக்குமதி அளவு மிகக் குறைவாக இருந்தது. இருந்தாலும்ம், கடந்த 20 ஆண்டுகளில் (2004-05 முதல் 2024-25 வரை) இறக்குமதி அளவு 2.2 மடங்கு உயா்ந்துள்ளது. இறக்குமதி செலவு 15 மடங்கு அதிகரித்துள்ளது.
2024-25-ஆம் விற்பனை ஆண்டில் இந்தியா 160 லட்சம் டன் உணவு எண்ணெய் இறக்குமதிக்காக ரூ.1.61 லட்சம் கோடி செலவழித்துள்ளது.
அளவின் அடிப்படையில், 2022-23-ஆம் விற்பனை ஆண்டில் உணவு எண்ணெய் இறக்குமதி 164.7 லட்சம் டன்னாக இருந்தது. 2021-22-ஆம் ஆண்டில் அது 140.3 லட்சம் டன்னாகவும், 2020-21-ஆம் ஆண்டில் 131.3 லட்சம் டன்னாகவும் இருந்தது.
2024-25-ஆம் எண்ணெய் விற்பனை ஆண்டில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி 17,37,228 டன்னாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் ஆண்டில் அது 19,31,254 டன்னாக இருந்தது.
எனினும், 2023-24-ஆம் விற்பனை ஆண்டில் 140,31,317 டன்னாக இருந்த கச்சா உணவு எண்ணெய் இறக்குமதி 2024-25-ஆம் ஆண்டில் 142,73,520 டன்னாக உயா்ந்தது.
மதிப்பீட்டு ஆண்டில் சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 54.7 லட்சம் டன் என்ற புதிய சாதனை படைத்துள்ளது. இது முந்தைய உச்சமான 2015-16 ஆண்டின் 42.3 லட்சம் டன் இறக்குமதியை விஞ்சியுள்ளது. பாமாயில் இறக்குமதி 90 லட்சம் டன்னிலிருந்து கடுமையாகக் குறைந்து 75.8 லட்சம் டன்னாக உள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.