FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க அனுமதி எதற்காக?

ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்க அனுமதி எதற்காக என்ற கேள்வி எழுந்துள்ளது பற்றி..

Updated On : 6 மார்ச் 2026, 6:50 pm IST
கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு - ANI
பகிர்:

ஈரானுடனான போர்ப் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், ரஷியாவிடமிருந்து இந்தியா அடுத்த 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள அனுமதி அளித்திருப்பதாக அமெரிக்கா அறிவித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட முன்னணி நாடாக விளங்கி வரும் இந்தியாவுக்கு, கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்க அனுமதி தேவைப்படுகிறதா என்ற கேள்வி உலகளவில் எழத் தொடங்கியிருக்கிறது.

இந்தியா தன்னுடைய எரிசக்தி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து, அமெரிக்காவின் இந்த அனுமதி அறிவிப்பு, உலகளவில் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன.

Advertisement

Advertisement

ஈரான் மீது, அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரக நாடுகள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே, ஈரான், பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோா்முஸ் நீரிணையை மூடிவிட்டது. அவ்வழியாக கப்பல்களை அனுமதிக்க முடியாது என்றும், மீறினால் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் எச்சரித்தது. இதனால் சவூதி அரேபியா, இராக், கத்தாா் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், கப்பல் மூலம் இந்தியாவுக்கு வருவது பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையிலும், விலை ஏற்றம் ஏற்படாமல் தவிா்க்கும் நோக்கிலும் ரஷியாவிடம் இருந்து மீண்டும் 15 லட்சம் பீப்பாய் முதல் 20 லட்சம் பீப்பாய் வரை கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்க வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணா் மேக்ஸிம் மால்கம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க இந்திய கடல் எல்லைக்கு அருகே 95 லட்சம் பீப்பாய்களுடன் நிற்கும் கப்பல்களை உடனடியாக இந்தியாவின் பக்கம் திருப்பிவிட தயாராக இருப்பதாக ரஷியா அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

முன்னதாக, ரஷியாவிடமிருந்துதான் குறைந்த விலையில் இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. ஆனால், அண்மையில் அமெரிக்கா, வணிக ஒப்பந்தத்தைக் காரணம் காட்டிக் கொடுத்த நெருக்கடியால், கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாகக் குறைக்கும் நடவடிக்கையை இந்தியா எடுத்து வந்தது. இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் தோராயமாக ரஷியாவிடமிருந்து 10 முதல் 17 லட்சம் பாரல்களை இறக்குமதி செய்து வந்தன. இது இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 25 - 30 சதவிகிதமாகும்.

இந்த நிலையில்தான், ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர்ப் பதற்றத்துக்கு இடையே, இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா தற்காலிகமாக அனுமதித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அதாவது 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று.

இதனால் இரண்டு கேள்விகள் எழுகின்றன... ஒன்று, இந்தியா, எரிபொருளை இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதி வழங்க வேண்டுமா? இரண்டாவது, ஈரான் கடல் எல்லையைக் கடந்து வரும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்திருந்தாரே, பிறகு, ஏன் நிலைமை சீரடையும் வரை ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்க அனுமதி அளிக்க வேண்டும்? என்பதே.

அது மட்டுமல்லாமல், ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது, நான்தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று அறிவிப்பது போல செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் அறிவித்து வந்தார். ஆனால், இந்தியாவோ, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலைக் குறைப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும் ஈரான், வெனிசூலாவைப் போல ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க எந்த தடைகளும் இல்லை. எனவே, ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே போக்குவரத்து, காப்பீடு, நிதி பரிமாற்றம் ஆகியவற்றை ஏற்பாடு செய்துகொள்ளும் எவரும் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்க முடியும். எனவே, ரஷியா உள்பட உலகின் எந்த நாடுகளிடம் இருந்தும் இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் என்றே இந்தியாவும் கூறிவந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்தியாவின் மிக முக்கிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக ரஷியாவே இருந்து வந்த நிலையில், தற்போதைய போர்ப் பதற்றம் காரணமாக, ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது என்றுதான் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், அமெரிக்க அதிபர் அனுமதி வழங்குவதற்கோ, குறிப்பிட்ட கால இடைவெளியை நிர்ணயிப்பதற்கோ வாய்ப்புகள் இல்லை என்றே பொருளாதார நிபுணர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

summary

The question has arisen as to why the US allowed India to import crude oil from Russia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments