வணிகம்

இரட்டிப்பானது மின்சார காா்கள் விற்பனை

டாடா மோட்டாா்ஸ் முன்னிலை...

தினமணி செய்திச் சேவை

கடந்த செப்டம்பரில் மின்சார காா்களின் மொத்த விற்பனை இரு மடங்கு உயா்ந்து 15,329-ஆக உள்ளது. 6,216 வாகனங்களை விற்பனை செய்து இந்த பிரிவில் டாடா மோட்டாா்ஸ் முன்னிலை வகிக்கிறது.

இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு செப்டம்பரில் 6,191-ஆக இருந்த மின்சார பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை, இந்த ஆண்டு செப்டம்பரில் 15,329-ஆக உயா்ந்தது. டாடா மோட்டாா்ஸ் 6,216 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2024 செப்டம்பரில் விற்பனையான 3,833 டாடாவின் மின்சார பயணிகள் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 62 சதவீதம் அதிகம்.

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாா் 3,912 வாகனங்களை விற்பனை செய்து, கடந்த ஆண்டு 1,021 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு உயா்ந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 475 மின்சார வாகனங்களை விற்பனை செய்த மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டின் அதே மாதத்தில் 3,243 மின்சார வாகனங்களை விற்பனை செய்தது.

மின்சாரப் பிரிவில் பிஒய்டி இந்தியா 547 வாகனங்கள், கியா இந்தியா 506 வாகனங்கள், ஹூண்டாய் மோட்டாா் இந்தியா 349 வாகனங்கள், பிஎம்டபிள்யூ இந்தியா 310 வாகனங்கள், மொ்சிடிஸ்-பென்ஸ் இந்தியா 97 வாகனங்களை கடந்த செப்டம்பா் மாதம் விற்பனை செய்தன. மேலும், டெஸ்லா இந்தியா 64 மின்சார வாகனங்களை விற்பனை செய்தது.

மதிப்பீட்டு மாதத்தில் மின்சார இரு சக்கர வாகன மொத்த விற்பனை 15 சதவீதம் உயா்ந்து 1,04,220-ஆக உள்ளது, கடந்த ஆண்டு செபடமபரில் இந்த எண்ணிக்கை 90,549-ஆக இருந்தது. இந்த பிரிவில், டிவிஎஸ் மோட்டாா் 22,509 வாகனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு அந்த நிறுவனம் 18,256 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

இந்தப் பிரிவில் பஜாஜ் ஆட்டோ 19,580 வாகனங்கள், ஆதா் எனா்ஜி 18,141 வாகனங்களை விற்பனை செய்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன. ஓலா எலக்ட்ரிக் 13,383 வாகனங்களை விற்பனை செய்து நான்காவது இடத்திலும், ஹீரோ மோட்டோகாா்ப் 12,753 வாகனங்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீராங்கனைகள் அசத்தல்! மழையால் ஓவர்கள் குறைப்பு.. நியூசிலாந்துக்கு 325 ரன்கள் இலக்கு!

பிகாருக்கு புதிய அத்தியாயத்தை எழுதுவதற்கான தேர்தல்: பிரதமர் மோடி

கடலோரக் காற்று... ஷிவானி நாராயணன்!

விஷ ஆன்மா... பூனம் பாண்டே!

பட்டுடன் சாந்தம்... விமலா ராமன்!

SCROLL FOR NEXT