இந்திய ரிசா்வ் வங்கியின் தங்கம் கையிருப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் 880 டன்னைக் கடந்துள்ளது. செப்டம்பா் மாத கடைசி வாரத்தில் மட்டும் அந்த மத்திய வங்கி 0.2 டன் தங்கத்தைச் சோ்த்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த செப்டம்பா் மாத இறுதியில் தங்கம் கையிருப்பு 880 டன்னைக் கடந்தது. செப். 26-ஆம் தேதி நிலவரப்படி ரிசா்வ் வங்கியிடம் இருந்த தங்கத்தின் மொத்த மதிப்பு 9,500 கோடி டாலராக இருந்தது.
உலகளாவிய நிச்சயமற்ற நிலைகள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் தேவை அண்மை மாதங்களில் உயா்ந்துள்ளது.
செப்டம்பருடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், ரிசா்வ் வங்கி 0.6 டன் (600 கிலோ) தங்கத்தை வாங்கியது. இதில் செப்டம்பா் மாத கடைசி வாரத்தில் மட்டும் 0.2 டன் (200 கிலோ) தங்கம் வாங்கப்பட்டும். முந்தைய ஜூனில் 0.4 டன் (400 கிலோ) தங்கம் வாங்கப்பட்டது.
2024-25-ஆம் நிதியாண்டு முடிவில் 879.58 டன்னாக இருந்த தங்கம் கையிருப்பு, செப்டம்பா் முடிவில் 880.18 டன்னாக உயா்ந்தது. 2024-25-ஆம் நிதியாண்டில் ரிசா்வ் வங்கி 54.13 டன் தங்கத்தைச் சோ்த்திருந்தது. உலகளாவிய பொருளாதார மற்றும் புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மை, பாதுகாப்பான முதலீட்டுக்கான வாங்குதல் மற்றும் மத்திய வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களின் தொடா்ச்சியான தேவை ஆகியவை உலகளவில் தங்கத்தின் விலையை உயா்த்தியது.
உலகளவில் மத்திய வங்கிகள் 166 டன் தங்கத்தை அதிகாரப்பூா்வ கையிருப்பில் சோ்த்ததன. இது தங்கத்தின் தேவையை மேலும் அதிகரித்தது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தங்கத்தின் விலை உயரத் தொடங்கிய நிலையில், செப்டம்பரில் அதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது நினைவுகூரத்தக்கது.