ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மின்னணு சந்தையில் அறிமுகமாகியுள்ளன.
ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் எஸ்இ 13 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 ஆகிய ஸ்மார்ட் கைக்கடிகாரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் குறித்தும் அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்தும் சமூக வலைதளப் பக்கங்களில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் விமர்சித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இதுவரை மடிக்கக்கூடிய வகையிலான தயாரிப்புகள் வெளியாகவில்லை என்பதை சுட்டிக்காட்டி, எக்ஸ் தளப் பக்கத்தில் சாம்சங் பதிவிட்டுள்ளது.
ஆப்பிள் தயாரிப்புகளில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்கப்போவதில்லை என 2022ஆம் ஆண்டு அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதனை விமர்சிக்கும் விதமாக ''இது எப்போது மடங்கும் என்பதை தெரியப்படுத்துங்கள்'' என சாம்சங் 2022ஆம் ஆண்டு பதிவிட்டிருந்தது.
தற்போது ஐபோன் 17 வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்தப் பதிவை சுட்டிக்காட்டி, ''இது இப்போதும் பொருந்துகிறது'' எனப் பதிவிட்டுள்ளது.
அதாவது ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றுகூட மடிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்படவில்லை என்பதை மறைமுகமாக சாம்சங் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தங்கள் தயாரிப்புகளில் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்கள் உள்ளதையும் குறிப்பிட்டு தங்கள் பயனாளர்களை ஊக்குவித்து வருகிறது.
மேலும் சமூக வலைதளங்களில் பயனாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முடியாது என்ற ஹேஷ்டேக்குடன் சாம்சங் பதில் அளித்து வருகிறது. அதாவது, ஆப்பிள் நிறுவனத்தால் மடிக்கக்கூடிய தயாரிப்புகளை மேற்கொள்ள முடியாது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக சாம்சங் இவ்வாறு செய்து வருகிறது.
இதையும் படிக்க | அறிமுகமானது ஐபோன் 17! முன்பதிவு செய்தால் எப்போது கிடைக்கும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.