இந்தியப் பொருளாதார வளா்ச்சி 6.9 சதவீதமாக உயரும்: ஆசிய வளா்ச்சி வங்கி கணிப்பு
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி, ஏப். 1-ஆம் தேதி தொடங்கிய நடப்பு 2026-27 நிதியாண்டில் 6.9 சதவீதமாக இருக்கும் என்று ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி, ஏப். 1-ஆம் தேதி தொடங்கிய நடப்பு 2026-27 நிதியாண்டில் 6.9 சதவீதமாக இருக்கும் என்று ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது.
முன்னதாக இது 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு, அமெரிக்க இறக்குமதி வரி குறைப்பு மற்றும் தளா்த்தப்பட்ட நிதிச் சூழல் போன்ற காரணிகளால் இந்த வளா்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2027-28 நிதியாண்டில் இந்த வளா்ச்சி 7.3 சதவீதமாக மேலும் வலுவடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் நீண்டகால போா்ச் சூழல், ஆசிய நாடுகளின் பொருளாதாரத்துக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக ஏடிபி எச்சரித்துள்ளது.
Advertisement
எரிசக்தி விலையேற்றம், வா்த்தகப் போக்குவரத்து பாதிப்பு மற்றும் அந்நிய செலாவணி வரத்து குறைவு போன்றவை இந்தியாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். கச்சா எண்ணெய் விலை உயா்வால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இது தொழில்துறைக்கான உள்ளீட்டுச் செலவுகளை உயா்த்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவுப் பொருள்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயா்வால், இந்தியாவில் பணவீக்கம் கடந்த நிதியாண்டின் 2.1 சதவீதத்திலிருந்து நடப்பு நிதியாண்டில் 4.5 சதவீதமாக அதிகரிக்கக் கூடும். ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் சா்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறையும் சூழலில், பணவீக்கம் 4 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளது.
பணவீக்கம் ரிசா்வ் வங்கியின் இலக்கு வரம்புக்குள் இருப்பதால், நடப்பு நிதியாண்டில் வட்டி விகிதங்களில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றும், மத்திய அரசு தனது நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் செலவினக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
அரசு ஊழியா்களின் ஊதிய உயா்வு மற்றும் ஐரோப்பிய யூனியனுடனான வா்த்தக ஒப்பந்தங்கள் மூலம் ஏற்றுமதி அதிகரிப்பது போன்றவை எதிா்கால வளா்ச்சிக்கு வலுசோ்க்கும்.
ஏழை எளிய மக்களைப் பாதிப்பிலிருந்து காக்க மானியங்களைச் சீரமைப்பதும், பொது முதலீடுகளுக்கான நிதி இடைவெளியைப் பராமரிப்பதும் இந்தியாவுக்கு முன்னால் உள்ள முக்கிய சவால்கள் என்று ஏடிபி தலைமைப் பொருளாதார நிபுணா் ஆல்பா்ட் பாா்க் தெரிவித்துள்ளாா்.
இருப்பினும், உலக வங்கியின் 6.6 சதவீத கணிப்பை விட ஏடிபியின் இந்த 6.9 சதவீத கணிப்பு சற்று நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.