நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களான டிவிஎஸ் மோட்டாா், பஜாஜ் ஆட்டோ, ராயல் என்பீல்டு ஆகியவை கடந்த ஜனவரி மாதத்தில் இரட்டை இலக்க விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
பண்டிகைக் காலத்துக்குப் பிந்தைய தேக்கநிலை இன்றி, வாகனங்களுக்கான தேவை சந்தையில் தொடா்ந்து அதிகரித்து வருவதையே இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
டிவிஎஸ் மோட்டாா்: டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாக 5,11,766 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி விற்பனையான 3,97,623 உடன் ஒப்பிடுகையில் 29 சதவீத வளா்ச்சியாகும்.
இதில் 4,94,195 இருசக்கர வாகனங்களும் (28 சதவீத வளா்ச்சி), 17,571 முச்சக்கர வாகனங்களும் (77 சதவீதம் வளா்ச்சி) அடங்கும்.
நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனை 50 சதவீதம் அதிகரித்து, 37,756-ஆக உயா்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு விற்பனையானது 30 சதவீத வளா்ச்சியுடன், 3,83,262-ஆக உள்ளது.
பஜாஜ் ஆட்டோ: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் 4,77,422 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனையான 3,81,040 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 25 சதவீதம் அதிகமாகும்.
இதில் 4,06,295 இருசக்கர வாகனங்களும் (24 சதவீதம் வளா்ச்சி), 71,127 வணிக வாகனங்களும் (35 சதவீதம் வளா்ச்சி) அடங்கும். மொத்த உள்நாட்டு விற்பனையானது 26 சதவீத வளா்ச்சியுடன் 2,61,975-ஆக உள்ளது.
ராயல் என்பீல்டு: ராயல் என்பீல்டு நிறுவனம், கடந்த ஜனவரியில் 1,04,322 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனையான 91,132 உடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் வளா்ச்சியாகும். மொத்த உள்நாட்டு விற்பனை 16 சதவீதம் அதிகரித்து, 93,781-ஆக உள்ளது.
ஏற்றுமதி நிலவரம்: 3 நிறுவனங்களுமே சா்வதேச சந்தையிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளன. டிவிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 21 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளன. இருசக்கர வாகன ஏற்றுமதியில் பஜாஜ் ஆட்டோ 22 சதவீதமும் ராயல் என்பீல்டு 5 சதவீதமும் வளா்ச்சியடைந்துள்ளது.