அடுத்து வரும் ஒரு சில மாதங்களில், ஸ்மார்ட்ஃபோன், தொலைக்காட்சி, லேப்டாப் போன்றவற்றின் விலைகள் 4 - 8 சதவிகிதம் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நவம்பர் - டிசம்பர் மாதங்களில் இதன் விலைகள் ஏற்கனவே உயர்ந்தள்ளதாகவும், இது அடுத்து வரும் மாதங்களிலும் நீடிக்கும் என்றும், தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கணினி தொழில்நுட்பங்களை அப்டேட் செய்வது அதிகரித்து வருவதால் மெமரி சிப்களுக்கான தேவை அதிகரித்து அதன் எதிரொலியாக விலை உயர்வு என்ற அபாயத்தை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே சந்தித்து வருகிறார்கள்.
இதன் காரணமாக, தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் போன்றவற்றின் விலைகளும் உயரும் என்றும், இந்த விலை உயர்வு என்பது, காலாண்டுக்கு ஒருமுறை அல்லது மாதந்தோறும் என்ற அடிப்படையில் இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டால், வரும் மார்ச் மாதத்துக்குள் மெமரி சிப் விலைகள் 120 சதவிகிதம் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனவே, தொலைக்காட்சி, லேப்டாப் போன்றவற்றை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் உடனடியாக வாங்குவது நலம் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.
ஏற்கனவே, இந்த விலை உயர்வின் எதிரொலியாக பல முன்னணி நிறுவனங்கள் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைக் குறைத்து வரூகிறது. ஒரு பக்கம் விலை உயர்வு, விற்பனையைக் குறைக்கும். மெமரி சிப்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவை அதிகரிக்கும். இந்த சுமையை நிறுவனங்கள் நுகர்வோர் மீதுதான் சுமத்துக்கும் நிலை ஏற்படும். எனவே, எங்கோ ஓரிடத்தில் மெமரி சிப்களின் தேவை அதிகரிப்பு, நேரடியாக மக்களை பாதிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.